/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துாரில் 80 அடி உள்வாங்கிய கடல்
/
திருச்செந்துாரில் 80 அடி உள்வாங்கிய கடல்
ADDED : நவ 27, 2024 02:29 AM

துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
பௌர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கோயில் கடற்கரையில் திரண்டு ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்துகின்றனர். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கோயில் கடற்கரையில் தண்ணீர் உள்வாங்கிக் காணப்படுவது வழக்கமாக நடந்து வருகிறது.
இதற்கிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், மறு அறிவிப்பு வரும் வரை துாத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, திருச்செந்துாரில் நேற்று காலை முதலே கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
மாலையில் திடீரென கோயில் முன்புள்ள கடல் பகுதியில் சுமார் 80 அடி உள்வாங்கிக் காணப்பட்டது. நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோயில் வரை 500 மீட்டர் துாரத்திற்கு பச்சை படிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.
கோயிலுக்கு வந்த பக்தர்கள் சிலர் பாறைகள் மீது நின்றபடி ஆபத்தை உணராமல் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் சிலர் கடலில் துாண்டில் போட்டு மீன்களை பிடித்தனர்.
கடல் உள்வாங்கிய பகுதிகளில் பக்தர்கள் நடமாட்டம் இருந்ததால் காவல் துறையினர் மற்றும் கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அவர்களை எச்சரித்து வெளியே அனுப்பினர். நவ.30ம் தேதி அமாவாசை என்பதால், சில நாட்களுக்கு முன்னரே கடல் உள்வாங்கிக் காணப்படுவதாக உள்ளூர் பக்தர்கள் சிலர் தெரிவித்தனர்.