/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
நடுக்கடலில் தத்தளித்த ஆறு மீனவர்கள் மீட்பு
/
நடுக்கடலில் தத்தளித்த ஆறு மீனவர்கள் மீட்பு
ADDED : டிச 02, 2024 04:32 AM

திரேஸ்புரம்,: துாத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நவ., 21ல் சதீஷ்குமார், 34, என்பவருடன் அவரது படகில் அதே பகுதி விக்னேஷ், 31, அல்போன்ஸ், 46, ஜூடு, 41, சுதர்சன், 23, ஜார்ஜ், 37, ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.
நவ., 26ல் அவர்கள் கரை திரும்பாததால் உறவினர்கள் அச்சமடைந்தனர். அவர்கள் ஆறு பேரும் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் படகுகளில் சென்று அவர்களை மீட்டு, நேற்று கரைக்கு அழைத்து வந்தனர்.
டீசல் காலியானதால் சர்வதேச கடல் பகுதிக்கு திசைமாறி சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர். நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் கயஸ் கூறுகையில், “மீனவர்களால்தான் ஆறு பேரும் மீட்கப்பட்டனர். இந்திய கடலோர காவல் படை ரோந்துக் கப்பல், மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசு, ஏற்கனவே இருந்த அதிவேக ரோந்து படகை மீண்டும் புதிதாக வாங்கி, ஆபத்து காலங்களில் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.