ADDED : செப் 26, 2026 11:04 PM

துாத்துக்குடி: குலசை கடற்கரையில் தொடரும் மண் அரிப்பால், பூங்கா விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளன.
துாத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரத்தில், பல லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இந்நிலையில், குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மணல் அரிப்பு அதிகரித்துள்ளதால், சமூக ஆர்வலர்களும், பக்தர்களும் வேதனை அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
சூரசம்ஹாரம் நடக்கும் இடத்தில் இருந்து, 50 மீ., தொலைவில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளபூங்கா சுற்றுச்சுவரின் ஒரு பகுதி முழுதும் மண் அரிப்பு ஏற்பட்டு, கடலுக்குள் விழுந்துவிட்டது. உயர் மின்விளக்கு கம்பங்களும் கடலுக்குள் விழுந்துள்ளன.
பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பலவும் சேதமடைந்துள்ளன. அடுத்த மாதம் தசரா திருவிழா நடக்க உள்ள நிலையில், மண் அரிப்பை தடுக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
