விஷம் குடித்த த.வெ.க., நிர்வாகி அமைச்சருக்கு எதிராக வீடியோ
விஷம் குடித்த த.வெ.க., நிர்வாகி அமைச்சருக்கு எதிராக வீடியோ
ADDED : செப் 23, 2026 12:25 AM

துாத்துக்குடி: அமைச்சர் மதன்ராஜாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த த.வெ.க., நிர்வாகி, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று வீடியோவை வெளியிட்டுஉள்ளார்.
துாத்துக்குடி அருகே புதுக்கோட்டையை சேர்ந்த முத்துக்குமரன், 31, த.வெ.க., துாத்துக்குடி தெற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக இருந்தார்.
ஒன்றிய செயலராக குழந்தைராஜா இருந்தார். இருவரையும் நீக்கிவிட்டு, தி.மு.க.,வில் இருந்து வந்தவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பதவி பறிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ளாத முத்துக்குமரன், குளிர்பானத்தில் சாணி பவுடரை கலந்து குடித்தபடி, நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'துாத்துக்குடி புறநகர் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பதவியில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்களை நீக்கிவிட்டு, தி.மு.க.வில் இருந்து வந்தவர்களுக்கு பதவி வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட செயலராக உள்ள அமைச்சர் மதன்ராஜா தொடர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வருகிறார். தி.மு.க.,வின் கூடாரமாகவும், பணம் படைத்தவர்களுக்கும் மட்டுமே பதவி வழங்கப்பட்டு வருகிறது.
விஜய் ரசிகர் மன்றத்தில் துவக்கக்கால நிர்வாகிகளாக இருந்தவர்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றனர். கட்சி தலைமை இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.
விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த முத்துக்குமரனை, அவரது நண்பர்கள் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சருக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு த.வெ.க., நிர்வாகி ஒருவர் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
