/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கலெக்டருக்கு அட்டை பஸ் பரிசளிப்பு மாணவருக்கு குவியும் பாராட்டு
/
கலெக்டருக்கு அட்டை பஸ் பரிசளிப்பு மாணவருக்கு குவியும் பாராட்டு
கலெக்டருக்கு அட்டை பஸ் பரிசளிப்பு மாணவருக்கு குவியும் பாராட்டு
கலெக்டருக்கு அட்டை பஸ் பரிசளிப்பு மாணவருக்கு குவியும் பாராட்டு
ADDED : மார் 14, 2025 01:34 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவர் ஒருவர் அட்டையால் செய்யப்பட்ட பஸ்சை பரிசளித்தார்.
திருச்செந்துார் - திருநெல்வேலி சாலையில் அமைந்துள்ள துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த மாதம் அங்கு ஆய்வு செய்த கலெக்டர் இளம்பகவத் ஊருக்குள் வராமல் சென்ற பஸ்களுக்கு அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று முன்தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சென்றனர். நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர்கள் வெளியே சென்றபோது அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர் மந்திரமூர்த்தி என்பவர் ஒரு பரிசுடன் அவர்களை நோக்கி சென்றார்.
அரசு பேருந்தை தத்துவமாக அட்டையால் வடிவமைத்து அதை கலெக்டரிடம் அவர் வழங்கினார். பரிசை பெற்றுக் கொண்ட கலெக்டர் இளம்பகவத், அருகே நின்ற எஸ்.பி., ஆல்பர்ட் ஜானிடம் காண்பித்து மகிழ்ந்தார். மேலும், அந்த பரிசை தனது உதவியாளரிடம் கொடுத்து அலுவலகத்தில் பத்திரமாக வைக்கும் படி அறிவுறுத்தினார். மாணவரின் இந்த செயலை கண்ட அங்கிருந்த பலரும் பாராட்டினர்.
பஸ்சை தத்ரூபமாக உருவாக்கிய மாணவர் மந்திரமூர்த்தி கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் இதுவரை முறையாக வந்து செல்லாத பஸ்கள் அனைத்தையும் வந்து செல்ல நடவடிக்கை எடுத்ததற்காக நானே அட்டையில் வடிவமைத்த மாதிரி பஸ்சை கலெக்டரிடம் வழங்கினேன். சிறிய அளவிலான மோட்டார் பொறுத்தப்பட்ட அந்த பஸ் ரிமோட் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.