/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
திருச்செந்துார் கோயிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம்
/
திருச்செந்துார் கோயிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம்
UPDATED : ஏப் 11, 2025 07:04 AM
ADDED : ஏப் 11, 2025 02:28 AM

மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடைபெறும் என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. புனரமைப்பு பணிக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்பதால் விசாரணையை நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்தது.
திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த பொதுநல மனு:
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மேம்பாட்டுப் பணி நடக்கிறது. இதற்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள்படி மத்திய சுற்றுச்சூழல் துறையின் கீழுள்ள வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும். மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது.
கோயிலைச் சுற்றிலும் 1 கிலோ மீட்டரில் கட்டுமானம் மேற்கொள்ள தொல்லியல்துறையின் அனுமதி பெற வேண்டியது அவசியம். கோயில் ஆகம விதிப்படி புனரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இந்நடைமுறைகளை பின்பற்றவில்லை. கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள்படி மேம்பாட்டு பணி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி பி.பி.பாலாஜி அமர்வு விசாரித்தது.
இவ்வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட தனியார் நிறுவனம் தரப்பு: கோயிலில் மேற்கொள்ள வேண்டிய பணி, இம்மனு இங்கு நிலுவையில் இருப்பதால் மெதுவாக நடைபெறுகிறது.
அரசு தரப்பு: ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள்: ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர் உட்பட அனைத்து தரப்பினரும் 'திருப்பணி' (புனரமைப்பு) பணிக்கு எந்தத் தடையும் இல்லை என ஒப்புக்கொண்டனர். குறிப்பாக மனுதாரரின் வழக்கறிஞர் எந்தத் தடையும் இல்லை என்றார். இதுபோல் நிலுவையிலுள்ள மற்றொரு வழக்குடன் சேர்த்து ஜூலை 14ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.

