/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பெண்ணின் கழுத்தை நெரித்து 7 சவரன் பறித்தவர் சிக்கினார்
/
பெண்ணின் கழுத்தை நெரித்து 7 சவரன் பறித்தவர் சிக்கினார்
பெண்ணின் கழுத்தை நெரித்து 7 சவரன் பறித்தவர் சிக்கினார்
பெண்ணின் கழுத்தை நெரித்து 7 சவரன் பறித்தவர் சிக்கினார்
ADDED : செப் 27, 2024 08:38 PM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே ரனசூர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வாணி, 56. கடந்த 25ம் தேதி வீட்டில் தனியாக இருந்தார். மருத்துவமனைக்கு சென்றிருந்த அவரது மகன் சந்தனவேல் வீடு திரும்பியபோது, வீட்டின் வெளிப்புறக் கதவு பூட்டியிருந்த நிலையில், வீட்டின் உள்ளே இருந்து வாணியின் முனகல் கேட்டது. கதவை உடைத்து உள்ளே சென்றார்.
கழுத்தில் காயங்களுடன் மயக்க நிலையில் இருந்த வாணி, வலி தாங்க முடியாமல் முனகிக் கொண்டிருந்தார்.
கோவில்பட்டி தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட வாணி, தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரது கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்கச் சங்கிலி காணாமல் போனது குறித்து, எட்டையபுரம் காவல் நிலையத்தில் சந்தனவேல் புகார் அளித்தார்.
இதற்கிடையே, கண் விழித்த வாணி, வீட்டின் அருகே வசித்து வரும் சுடலைமுத்து, 31, என்பவர் கயிற்றால் கழுத்தை நெரித்து, ஏழு சவரன் நகையை பறித்துச் சென்றதாக தெரிவித்தார்.
இதையடுத்து, சுடலை முத்துவை கைது செய்த போலீசார், அவர் மரத்தடியில் புதைத்து வைத்திருந்த ஏழு சவரன் நகையை மீட்டனர்.
இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:
வாணியின் வீட்டின் அருகே வசிக்கும் கூலித்தொழிலாளியான சுடலைமுத்து, வாணிக்கு நன்கு அறிமுகமானவர். சம்பவத்தன்று, வீட்டில் யாரும் இல்லாதபோது, அங்கு சென்ற சுடலைமுத்துவுக்கு, வாணி டீ போட்டுக் கொடுத்துள்ளார்.
டீயை குடித்து முடித்தவர், வாணியை தாக்கி கயிற்றால் அவரது கழுத்தை இறுக்கியுள்ளார். வாணி மயக்கமடையவே இறந்துவிட்டதாக நினைத்து, கழுத்தில் இருந்த ஏழு சவரன் நகையை எடுத்து கொண்டு, கதவை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பியோடியுள்ளார். கடன் அதிகமானதால் நகையை பறித்தாக சுடலைமுத்து தெரிவித்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.