/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
படுமோசமான நிலையில் துாத்துக்குடி - திருச்செந்துார் சாலை
/
படுமோசமான நிலையில் துாத்துக்குடி - திருச்செந்துார் சாலை
படுமோசமான நிலையில் துாத்துக்குடி - திருச்செந்துார் சாலை
படுமோசமான நிலையில் துாத்துக்குடி - திருச்செந்துார் சாலை
ADDED : மார் 20, 2025 02:23 AM

துாத்துக்குடி:துாத்துக்குடியில் இருந்து திருச்செந்துார் செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. இதை நான்கு வழிச்சாலையாக்கி சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
துாத்துக்குடியில் இருந்து திருச்செந்துார் 40 கி.மீ. சாலை அதிக போக்குவரத்துள்ள நெடுஞ்சாலை ஆகும். பழையகாயல், முக்காணி, ஆத்துார், சாகுபுரம், ஆறுமுகநேரி, வீரபாண்டியப்பட்டணம் உள்ளிட்ட முக்கிய ஊர்கள் உள்ளன. மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து திருச்செந்துார் செல்ல துாத்துக்குடி வழியாகவே சென்று வருகின்றனர்.
இச்சாலையில் ஆங்காங்கே வெள்ளை நிறக் கோடுகள் மட்டுமே உள்ளன. தரமற்ற சாலையால் குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
துாத்துக்குடி துறைமுகம் செல்லும் சாலையிலிருந்து திருச்செந்துார் சாலை பிரிகிறது. துாத்துக்குடி அருகே ஸ்பிக் தொழிற்சாலை, துறைமுகம், பழையகாயல் அருகே ஜிர்கோனியம் பேக்டரி, ஆறுமுகநேரி அருகே தரங்கதாரா கெமிக்கல்ஸ், பல உப்பளங்கள் உள்ளதால் இந்த சாலையில் சரக்கு வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் இயங்குகின்றன.
திருச்செந்துார் செல்லும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும்போது விபத்துகளை சந்திக்கின்றனர். பகலில் பயணிப்பது சிரமம் என்றால் இரவில் அதைவிட ஆபத்தானதாக இருக்கிறது.
2023ம் ஆண்டு டிசம்பரில் திடீர் மழையினால் வெள்ள நீர், இந்த சாலையின் பல இடங்களை கடந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. ஒன்றரை ஆண்டுகளாகியும் அந்த பாதிப்புகள் சீரமைக்கப்படவில்லை.
துாத்துக்குடியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளா காந்திமதிநாதன், துாத்துக்குடி -திருச்செந்துார் சாலையை சீரமைக்க வலியுறுத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
பிப்.17ல் வழக்கு விசாரணைக்கு வந்த போது, நெடுஞ்சாலைத் துறையினர் இது குறித்து பதில் அளிக்க நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி உத்தரவிட்டனர்.
காந்திமதிநாதன் கூறுகையில், மொத்த முள்ள 40 கிலோமீட்டர் சாலையையும் சீரமைக்க வேண்டும். பகுதியாக சீரமைத்தால் மீண்டும் பாதிப்புகள் தொடரும். எனவே வழக்கு அடுத்து விசாரணையின் போது முழுவதும் சீரமைக்க கோரிக்கை வைக்க உள்ளோம் என்றார்
2021 முதல் இச்சாலை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குப் மாற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி கோட்ட பொறியாளர் சண்முகசுந்தரம் கூறுகையில், முதற்கட்டமாக துாத்துக்குடி - முக்காணி வரையிலான 17 கி.மீ.,சாலையை சீரமைக்க ரூ.22.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும். மீதமுள்ள 23 கிமீ சாலையை தற்காலிகமாக பேட்ச் ஒர்க் முறையில் சீரமைக்க உள்ளோம்.
துாத்துக்குடி - திருச்செந்துார் - கன்னியாகுமரி வரை சாலையை விரிவுபடுத்த பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன என தெரிவித்தார்.