/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லை
/
கோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லை
கோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லை
கோவில்பட்டி தாலுகாவுடன் இணைந்து மூன்றாண்டுகளாகிவிட்டது அரசு துறைகள் மட்டும் இன்னும் மாறவே இல்லை
ADDED : செப் 18, 2011 11:52 PM
கோவில்பட்டி : கோவில்பட்டி தாலுகாவில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் இணைக்கப்பட்ட இளையரசனேந்தல் பிர்காவின் அரசுத்துறை சம்பந்தப்பட்ட மாற்றங்கள் முழுமையடையாததால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
கோவில்பட்டி அருகிலுள்ள இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 கிராமங்கள் நெல்லை மாவட்டத்தில் இருந்தது. இந்த கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்க வேண்டுமென பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து நடந்த ஏற்பாடுகளில் 12 கிராமங்களின் பஞ்.,ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பினர். இதை அடிப்படையாகக் கொண்டு கடந்த 2007 அக்.4ம் தேதியன்று நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக கடிதம் ந.க.எண்.ஆணை/70262/2007 ன்படி 12 கிராமங்கள் மாவட்டம் மாறுவது சம்பந்தமாக தற்போதைய நிலவரம் மற்றும் மாறிய பின்னர் உள்ள நிலவரம் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பியது. இதையடுத்து கடந்த 2008 ஏப்.15ம் தேதிய அரசு சிறப்பிதழில் இது சம்பந்தமான ஆணை வெளியிடப்பட்டது. தமிழக அரசின் ஆணை (எண்.213)யில் நெல்லை மாவட்டம் இளையரசனேந்தல் பிர்காவிலுள்ள பிச்சைதலைவன்பட்டி, அப்பனேரி, நக்கலமுத்தன்பட்டி, வடக்குப்பட்டி, லட்சுமியம்மாள்புரம், பிள்ளையார்நத்தம், அய்யனேரி சித்திரம்பட்டி, முக்கூட்டுமலை, ஜமீன்தேவர்குளம், இளையரசனேந்தல், புளியங்குளம் ஆகிய 12 கிராமங்களை, சங்கரன்கோவில் தாலுகாவிலிருந்து பிரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகாவில் இணைக்க உத்தரவிட்டது. மேலும் குறிப்பிட்ட 12 வருவாய் கிராமங்களும் கோவில்பட்டி யூனியனில் இணைக்க அறிவுறுத்தப்பட்டது. அதே நேரத்தில் கோவில்பட்டி சட்டசபை தொகுதியில் இருந்து இக்கிராமங்கள், தொகுதி சீரமைப்பின் போது சங்கரன்கோவில் சட்டசபை தொகுதிக்கு மாறியது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு பிப்.2ல் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் ஒருங்கிணைந்த கருத்துரு அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில் மாவட்டம் மாறிய கிராமங்களின் அரசுத்துறை சம்பந்தமான நடைமுறைகளை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரப்பட்டது. மேலும் தமிழ்நாடு சட்டசபை மனுக்கள் குழு இது சம்பந்தமாக அரசிடம் விளக்கம் கேட்டது. இதற்கு கடந்த 2010ம் ஆண்டு ஏப்.29ம் தேதியன்று நடவடிக்கைகள் பரிசீலனையில் இருப்பதாக அரசின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பஞ்.,யூனியன் அலுவலகத்துடன் தொடர்புடைய கல்வித்துறை, மின்வாரியம், போலீஸ் ஸ்டேசன் போன்ற முக்கியத்துறைகள் தற்போது வரை முழுமையான மாற்றம் அடையவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாலுகா மாற்றம் செய்யப்பட்ட கிராமங்களை மீண்டும் சங்கரன்கோவில் தாலுகாவிலேயே இணைக்க வேண்டுமென வலியுறுத்தி ஒருசில தரப்பிலிருந்து முயற்சிகளும் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் இளையரசனேந்தல் பிர்காவிலுள்ள முக்கூட்டுமலை வருவாய்கிராமம், கோவில்பட்டி தாலுகாவில் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முக்கூட்டுமலை கிராம பஞ்.,ன் நெல்லை மாவட்டத்திலுள்ள நடுவப்பட்டி வருவாய் கிராமம் உள்ளது. ஆகவே முக்கூட்டுமலை பஞ்.,லிருந்து, நடுவப்பட்டி கிராமத்தை பிரித்து தனிப்பஞ்சாயத்தாக ஆக்க நெல்லை மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துதல் உட்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அந்நேரத்தில் பிர்கா மாற்றத்தை வலியுறுத்தியோர் தரப்பிலிருந்து கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நடந்த கோவில்பட்டி யூனியன் கூட்டத்தில் 12 கிராமங்களை நிராகரிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பை ஏற்படுத்தினர்.
இதன் காரணமாக இளையரசனேந்தல் பிர்கா மாற்றம் பொதுமக்கள், அரசியல்வாதிகள், சமூகஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் மத்தியில் பட்டிமன்ற விவாத பொருளாக மாறியது. இதில் குருவிகுளம் யூனியன் குறிப்பிட்ட கட்சியின் கோட்டையாக இருப்பதால், தங்களுக்கு செல்வாக்குள்ள 12 கிராமங்களின் மாற்றத்தால் உள்ளாட்சி தேர்தலில் பதவியை இழக்க நேரிடும் எனக் கருதுவதாகவும், கோவில்பட்டி போட்டியாளர்கள் 12 கிராமங்களின் ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்குமா என நம்பிக்கையற்ற நிலையில் இருப்பதாகவும் என்பது உட்பட்ட பல்வேறு கருத்துக்கள் எழுந்தது. இவ்வாறு பல்வேறு தரப்பிலிருந்து விதவிதமான கருத்துக்கள் எழுந்தாலும், பிர்கா மாற்றத்திற்கு முன்பே குறிப்பிட்ட 12 கிராமங்களும் கோவில்பட்டி யூனியனுடன் இணைந்து செயல்பட வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டு இருப்பதை சமூக ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆகவே தாலுகா மாற்றம் செய்யப்பட்ட கிராம மக்களுக்கு தேவையான அரசுத்துறை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இதில் முதற்கட்டமாக தற்போது வரை மாற்றம் செய்யப்படாமல் இருக்கும் அரசுத்துறைகளின் ஆவணங்கள், கோப்புகள் மற்றும் பொறுப்புகள் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்ற வேண்டுமென கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
மேலும் பொதுமக்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் நடவடிக்கைகளுக்கு அரசியல் காரணங்கள் தடையாக அமையாத வண்ணம் இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்.