/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கட்டட தொழிலாளி படுகொலை
/
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கட்டட தொழிலாளி படுகொலை
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கட்டட தொழிலாளி படுகொலை
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கட்டட தொழிலாளி படுகொலை
ADDED : செப் 19, 2011 12:01 AM
குரும்பூர் : குரும்பூரில் கட்டட தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.
கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் சக தொழிலாளியே அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: குரும்பூர் அருகேயுள்ள வீரமாணிக்கம் சந்தியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமர்(40). இவருக்கு சுந்தரி(30) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர் நேற்று காலையில் குரும்பூர் ரயில்வே தண்டவாளம் அருகில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி., ஸ்டீபன் ஜேசுபாதம் விசாரணை நடத்தி குற்றவாளியை பிடிக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட ராமருடன் வேலை பார்த்த திருமலர்புரம் சுப்பிரமணி மகன் முத்துபெரியசாமி(38) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர்தான் கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையின் போது கடந்த 1வருடத்திற்கு முன்பு முத்துபெரியசாமியின் மனைவி இறந்துவிட்டதால் ராமர் குடும்பத்தை தன்வீட்டில் முத்துபெரியசாமி தங்கவைத்துள்ளார். இருவரும் ஒன்றாக கட்டட வேலைபார்த்துவந்துள்ளனர். அப்போது ராமருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராமரின் மனைவி சுந்தரிக்கும் முத்துபெரியசாமிக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ராமரின் குடிப்பழக்கத்தை பயன்படுத்திக்கொண்ட இருவரும் ராமருக்கு அடிக்கடி மதுவாங்கிகொடுத்து அவரை போதையில் தள்ளிவிட்டு தங்களது கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக ராமர் குடிப்பதை குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது.
குடிப்பழக்கத்தை குறைத்தவுடன் முத்துபெரியசாமிக்கும், தனது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததை தெரிந்து கொண்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு முத்துபெரியசாமி குரும்பூருக்கு வந்து அங்கு நின்றுகொண்டிருந்த ராமரிடம் உன் மனைவியையும், என்னையும் தவறாக நினைக்காதே.. நடந்ததையெல்லாம் கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடு. நாம் இருவரும் அண்ணன் தம்பி மாதிரி எப்போதும் இருப்போம் என்று சமரசம் பேசி மதுக்கடைக்கு அழைத்துசென்று மதுவாங்கி கொடுத்து இரவு குரும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள இருட்டுப்பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அங்கு வந்தவுடன் முத்துபெரியசாமி அருகில் கிடந்த பெரிய கல்லை ராமரின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு ஓடிவிட்டதாக தெரியவந்தது. இதுதொடர்பாக ராமரின் மனைவி சுந்தரியிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.கள்ளத்தொடர்புக்காக கட்டடத்தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குரும்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.