/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
துாத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
துாத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
துாத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
துாத்துக்குடி பனிமய மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஜூலை 27, 2025 01:20 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள புகழ்பெற்ற துாய பனிமய மாதா சர்ச்சில், 443வது திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
துாத்துக்குடி, துாய பனிமய மாதா சர்ச்சில், ஆண்டுதோறும் ஜூலை 26ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்குவது வழக்கம். நேற்று காலை 7:00 மணிக்கு, மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து, மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடி, ஆலய வளாகத்தை சுற்றி கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, ஆலய கொடி மரத்தில், பிஷப் ஸ்டீபன் அந்தோணி கொடியை ஏற்றினார். அப்போது, உலக அமைதியை வலியுறுத்தி சமாதான புறாக்கள் பறக்கவிடப்பட்டன.
பழைய துறைமுகத்தில் இழுவை கப்பலில் இருந்து சங்கொலி எழுப்பப்பட்டது. பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக தாங்கள் கொண்டு வந்திருந்த பழம், பால் உள்ளிட்டவற்றை அங்கிருந்தவர்களுக்கு கொடுத்தனர்.
தமிழக சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கமிஷனர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா உட்பட பலர் பங்கேற்றனர்.
அன்னைக்கு, பகல் 12:00 மணிக்கு, பொன் மகுடம் சூட்டப்பட்டது. போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி, ஆகஸ்ட் 5ல் நடக்கிறது. அன்று, மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.