விளாத்திகுளம் மாணவி பலாத்காரம் செய்து கொலை : சாயல்குடி வாலிபர் கைது
விளாத்திகுளம் மாணவி பலாத்காரம் செய்து கொலை : சாயல்குடி வாலிபர் கைது
ADDED : மார் 20, 2026 03:04 AM

சாயல்குடி: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கிராமத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மார்ச் 10ல் பிளஸ் 2 தேர்வு எழுதிய 17 வயது மாணவி வீடு திரும்பினார். மாலையில் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற போது பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். மாணவியை பெற்றோர் தேடிய நிலையில் அடுத்த நாள் காலை காட்டுப்பகுதியில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். குளத்துார் போலீசார் விசாரித்தனர். துாத்துக்குடி எஸ்.பி., மதன் உத்தரவில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
மாணவி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் மாணவியின் விரல் நகங்களில் இருந்த சதையின் டி.என்.ஏ., மாதிரி அடிப்படையில் பழைய குற்றவாளிகள் குறித்து விசாரித்தனர்.
ராமநாதபுரம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் 30, கடந்த 2020ல் எட்டயபுரம் பகுதியில் 60 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமினில் உள்ளார். அவர் குளத்துார் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து இடுவதற்காக சென்ற போது மாணவியை பலாத்காரம் செய்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தர்ம முனீஸ்வரன் டி.என்.ஏ., ஒத்துப் போனதாக போலீசார் தெரிவித்தனர்.
