/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
காலிக்குடங்களுடன் பெண்கள் வேதனை
/
காலிக்குடங்களுடன் பெண்கள் வேதனை
ADDED : ஆக 03, 2025 02:49 AM

துாத்துக்குடி:'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி சட்டசபை தொகுதி வாரியாக பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளார். துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளிலும் அவர் மூன்று நாட்களாக பிரசாரம் செய்தார்.
கோவில்பட்டியில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்த அவர், இரவு ஓட்டப்பிடாரம் நோக்கி பிரசார வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். விளாத்திகுளம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கே.வேலாயுதபுரம் பகுதியில் சாலையோரத்தில் ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் தண்ணீர் பிடிக்க காத்திருந்ததை கண்டு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடி கேட்டறிந்தார். தண்ணீர் பிடிக்க அரை கிலோ மீட்டர் தொலைவு நடந்து வர வேண்டியுள்ளதாக பெண்கள் அவரிடம் கூறினர். தலா 20 லிட்டர் பிடிக்கும் ஆறு குடங்களை ஒரு தள்ளுவண்டியில் வைத்து வீட்டிற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்' என பெண்களிடம், பழனிசாமி உறுதியளித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார். இதுதொடர்பாக அவர் தன், 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஓட்டப்பிடாரம் செல்லும் வழியில் கே.வேலாயுதபுரம் அருகே பெண்கள் பலர் காலிக் குடங்களுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசியபோது, தங்கள் ஊருக்கு குடிநீர் இணைப்பு இல்லாததால், குடங்களை துாக்கிக் கொண்டும், தள்ளுவண்டியில் அலைந்தும் தண்ணீருக்கு மிகவும் கஷ்டப்படுவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாதது உள்ளிட்ட பல்வேறு குறைகளை அவர்கள் என்னிடம் முறையிட்டனர். அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மக்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

