/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை கொன்ற வாலிபர் கைது
/
பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை கொன்ற வாலிபர் கைது
ADDED : அக் 09, 2025 03:06 AM
துாத்துக்குடி: குடிபோதையில், பக்கத்து வீட்டு வளர்ப்பு நாயை கல்லால் தாக்கி கொலை செய்த வாலிபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
துாத்துக்குடி நேதாஜி நகர் 11வது தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மாரியப்பன் என்பவர், தன் வீட்டில் இரண்டு நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார்.
பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜா மகன் மாரிசெல்வம், 22, என்பவர், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் போது, மாரியப்பன் வளர்த்து வரும் நாய்கள் அவரை பார்த்து குரைத்துள்ளன. இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், நேற்று மாலை குடிபோதையில் அந்த வழியாக சென்ற மாரிசெல்வத்தை பார்த்து இரண்டு நாய்களும் குரைத்துள்ளன. ஆத்திரமடைந்த மாரிசெல்வம் அங்கு கிடந்த 'ஹாலோபிளாக்' கற்களால் இரண்டு நாய்களையும் கடுமையாக தாக்கினார்.
இதில், ஆண் நாய் சம்பவ இடத்திலேயே இறந்தது. பெண் நாய் முகத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக மாரியப்பன் சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். மேலும், அவர் கற்களால் நாய்களை தாக்குவதை மொபைல்போனில் வீடியோ எடுத்து, 'ப்ளுகிராஸ்' அமைப்பினருக்கும் அனுப்பினார்.
இதையடுத்து, சிப்காட் போலீசார் மாரிசெல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.