/
உள்ளூர் செய்திகள்
/
தூத்துக்குடி
/
கடலில் படகு சிறைபிடிப்பு மீனவருக்கு கத்திக்குத்து
/
கடலில் படகு சிறைபிடிப்பு மீனவருக்கு கத்திக்குத்து
ADDED : அக் 08, 2025 03:21 AM

துாத்துக்குடி:நடுக்கடலில், விசைப்படகை சிறைபிடித்த ஒரு கும்பல், மீனவரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம், செங்கோல்மணிநகரை சேர்ந்த அமல நர்மதா ஆஷா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், 9 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை, கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். வினோதன், 29, என்பவர் படகை ஓட்டினார்.
துாத்துக்குடியில் இருந்து தெற்கில், 25 கடல் மைல் தொலைவில், நேற்று காலை, 7:00 மணியளவில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இரண்டு நாட்டுப்படகுகளில் வந்த திருநெல்வேலி மாவட்டம், கூத்தங்குழியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட மீனவர்கள், விசைப்படகை சிறை பிடித்தனர்.
படகுக்குள் ஏறிய அவர்கள், அங்கிருந்த மீனவர்களை தாக்கி, டிரைவர் வினோதன் கழுத்தில் கத்தியால் குத்தினர். பின், படகை சிறைபிடித்து, இடிந்தகரைக்கு ஓட்டி சென்றனர்.
அமல நர்மதா ஆஷாவின் புகார்படி, தருவைகுளம் மரைன் போலீசார் விசாரித்தனர். அதில், கூத்தங்குழி, மீனவர்கள் விரித்திருந்த வலையை, ஒரு விசைப்படகு சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது. அந்த படகு வினோதன் ஓட்டி சென்ற படகு என நினைத்து, கூத்தங்குழி மீனவர்கள் சிறைபிடித்து தாக்கியது தெரிந்தது.