/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
சுய உதவி குழு பெயரில் ரூ.81 லட்சம் மோசடி தனியார் வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது
/
சுய உதவி குழு பெயரில் ரூ.81 லட்சம் மோசடி தனியார் வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது
சுய உதவி குழு பெயரில் ரூ.81 லட்சம் மோசடி தனியார் வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது
சுய உதவி குழு பெயரில் ரூ.81 லட்சம் மோசடி தனியார் வங்கி மேலாளர் உட்பட 2 பேர் கைது
ADDED : ஜூலை 24, 2024 10:55 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் ஷகிலாபானு, 30. மகளிர் சுய உதவி குழு உறுப்பினர். அவருக்கு முகமது ரபிக், 37, என்பவர் அறிமுகமானார். அவர், ஷகிலாபானுவிடம், 'தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேனேஜர் ஒருவர் எனக்கு தெரியும். அவர் மூலம் மகளிர் சுய உதவி குழுவில் உள்ளோருக்கு வங்கி கடன் பெற்று தருகிறேன்' என்றார்.
அதை உண்மை என நம்பிய ஷகிலா பானு, 90 பேருக்கு, தலா, 10,000 ரூபாய் கடன் கேட்டு, ஓராண்டுக்கு முன், முகமது ரபிக்கிடம் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வழங்கினார். இதை பெற்ற முகமது ரபிக், மோசடித்தனமாக அவற்றை, தனியார் வங்கி மேனேஜர் கவுதம், 33, என்பவரிடம் வழங்கி விட்டார்.
பின் இருவரும் சேர்ந்து, மகளிர் சுய குழு உறுப்பினர்கள் பெயரில், ஒருவருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் என, 90 பெண்கள் பெயரில், 90 லட்சம் ரூபாயை, தனியார் வங்கியிலிருந்து கடனாக பெற்றனர். மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த, 90 பேருக்கு தலா, 10,000 ரூபாய் வீதம், 9 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கினர்.
கடந்த வாரம், குழு உறுப்பினர்களுக்கு வங்கியிலிருந்து, 'கடனாக பெற்ற ஒரு லட்சம் ரூபாயை திருப்பி செலுத்துங்கள்' என நோட்டீஸ் வந்தது. அதிர்ச்சியடைந்த பெண்கள், போலீசில் புகார் அளித்தனர். ஜோலார்பேட்டை போலீசார் விசாரணையில், தனியார் வங்கி மேனேஜர் கவுதம் மற்றும் முகமது ரபிக் ஆகியோர், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களிடம், 81 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது; இருவரையும் போலீசார் கைது செய்தனர்.