/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
ஊரை விட்டு வெளியேறி பொங்கல் வைத்து வழிபாடு
/
ஊரை விட்டு வெளியேறி பொங்கல் வைத்து வழிபாடு
ADDED : ஆக 05, 2024 06:45 PM
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி பொங்கல் வைத்து, ஆடி, பாடி, மகிழ்ந்து, நுாதன வழிபாடு நடத்தினர்.
திருப்பத்துார் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தில், 300க்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விழா எடுப்பது வழக்கம்.
விழா தொடங்கும், 10 நாட்களுக்கு முன்பு, கிராம மக்கள் அனைவரும் வீடுகளை பூட்டி, வெளியேறி, ஒதுக்குப்புற வனப்பகுதிக்கு சென்று, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி, ஆடி, பாடி மகிழ்வது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு மாரியம்மன் கோவில் திருவிழா, வரும், 15ம் தேதி நடக்க உள்ளதை முன்னிட்டு, நேற்று கிராம மக்கள் அனைவரும் வீடுகளை பூட்டி, ஆடு, மாடுகளுடன் ஊரை காலி செய்து, வனப்பகுதிக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
பொங்கல் வைக்கும் போது ஏற்படும் புகை, கிராமத்தை நோக்கி செல்லும்போது, கிராமத்திலுள்ள துஷ்ட சக்திகள் விலகும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பின்னர், நேற்றிரவு, 7:00 மணிக்கு மேள, தாளங்களுடன் கிராம மக்கள் ஊர் திரும்பினர்.