/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
மருமகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய மாமனார்
/
மருமகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய மாமனார்
ADDED : அக் 07, 2025 08:25 PM
நாட்றம்பள்ளி:மருமகளின் கழுத்தில், போதையில் கத்தியை வைத்து, மாமனார் கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.
திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி ஆலிவட்டம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவர்களது மகன்கள் கோவிந்தசாமி, 50, சவுந்தர், 48. இவர்களுக்கு சொந்தமான, 75 சென்ட் நிலம் உள்ளது. இது, பாகப்பிரிவினை செய்யாமல் பொது சொத்தாக உள்ளது.கடந்த மாதம் சவுந்தர், இவருக்கு சொந்தமான நிலத்திற்கு, பொதுசொத்தாக உள்ள நிலத்தின் வழியாக, பைப் லைன் அமைக்க, கோவிந்தசாமியின் மகன் திருமால், 28, என்பவரிடம் அனுமதி கேட்டார்.
இதற்கு திருமால் மறுத்தார். இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சவுந்தர், நேற்று முன்தினம் மாலை, மது போதையில், திருமாலை கொலை செய்ய கத்தியுடன் சுற்றித்திரிந்தார்.அப்போது வீட்டிலிருந்த, திருமாலின் மனைவியும், தன் மருமகளுமான இந்து, 25, என்பவர் கழுத்தில் கத்தியை வைத்து, 'திருமாலை கொலை செய்ய போகிறேன், அவன் வரவில்லை என்றால், உன்னை கொன்று விடுவேன்' என்றார். அப்போது, அக்கம் பக்கத்தினர் இந்துவை காப்பாற்றினர்.
இந்த வீடியோ வைரலானதால், நாட்றம்பள்ளி போலீசார் சவுந்தரை தேடி வந்தனர்.இதையறிந்த அவர், தனக்கு உடல்நிலை பாதித்துள்ளதாக கூறி, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.