ADDED : மே 23, 2026 03:25 AM
அ நிறம் | அளவு
வாணியம்பாடி: திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த, தமிழக - ஆந்திர எல்லையான ஜமான்கொல்லி வழியாக, ஆந்திராவில் இருந்து மதுபாட்டில்கள், விற்பனைக்காக கடத்தப்படுவதாக, திம்மாம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அப்பகுதியில், போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, கழுதையுடன் வந்த நபரை நிறுத்தி, கழுதையின் முதுகில் இருந்த மூட்டையை பிரித்து, சோதித்தனர். அதில், ஆந்திர மாநிலத்தின், 310 மதுபாட்டில்கள் இருந்தன.
விசாரணையில், மதுபாட்டில்களை கடத்தி வந்தவர், வாணியம்பாடி அடுத்த, தேவராஜபுரத்தை சேர்ந்த சக்திவேல், 28, என்பதும், ஆந்திராவில் இருந்து மலிவான விலைக்கு கிடைக்கும் மதுபாட்டில்களை அவர் கடத்தி வந்து, இங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
