/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
அழிவின் விளிம்பில் கற்கால பாறை ஓவியங்கள்
/
அழிவின் விளிம்பில் கற்கால பாறை ஓவியங்கள்
ADDED : டிச 28, 2025 04:06 AM

திருப்பத்துார்: அழிவின் விளிம்பில் உள்ள கற்கால பாறை ஓவியங் களை பாதுகாக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க, வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம், சோழனுார் கல்யாண முருகன் கோவிலின் கிழக்கு பகுதியில், குன்றின் பக்கவாட்டில் உள்ள குகையில், 6 அடி அகலம், 12 அடி நீளத்தில் பாறை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இதில், 13 மனித உருவங்களும், அவர்கள் கைகளில் ஆயுதங்களும் காணப்படுகின்றன.
இதுபோல, ஏலகிரி மலையின் தரைத்தளத்தில் இருந்து, 1,000 அடி உயரத்தில், 80க்கும் மேற்பட்ட மனித உருவங்களுடன் கூடிய ஓவிய தொகுப்புகள் காணப்படுகின்றன. விலங்குகளின் மீது அமர்ந்து போர் செய்வது, போரிடும் மனிதர்கள் இடுப்பில் குழந்தைகள் இருப்பது ஆகிய ஓவியங்கள், பழங்கால மக்களால் வரையப்பட்டுள்ளன.
வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் பிரபு கூறியதாவது:
திரு ப்பத்துார் அடுத்துள்ள செல்லியம்மன் கோவில் வளாகத்தில் புதிய கற்கால கோடாரிகள் வழிபாட்டில் உள்ளன. அந்த கோவில் எதிரே தம்புரான் குன்று உள்ளது. அங்கு, 10 பேர் வாழக்ககூடிய வகையில் அமைந்துள்ள குன்றில், ஐந்து வெள்ளை நிற ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஸ்வஸ்திக் குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.
திருப்பத்துார் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின், கண்டறியப்பட்டுள்ள முதல் பாறை ஓவியம் இதுவாகும். செல்லியம்மன் கொட்டாய் பகுதியில் உள்ள குகைகளில் நெருப்பு மூட்டி பொதுமக்கள் உணவு சமைத்து வருவதால், இங்குள்ள பாறை ஓவியம் அழியும் விளிம்பில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் இணைந்து பாறை ஓவியங்களை பாதுகாக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓவியங்கள்
வரைந்தது ஏன்?
வேட்டை பொருட்கள் மிகுதியாக கிடைக்கும் இடங்களில், வேட்டை சமூக மக்கள் ஓவியங்கள் வரைந்துள்ளனர். மிருகங்களை வேட்டையாடுவது போல ஓவியங்களை வரைந்தால், வேட்டையாடும் போது அதிக மிருகங்கள் கிடைக்கும்; விலங்குகளை கட்டுப்படுத்தும் ஆற்றல் பெறலாம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் ஓவியங்களை வரைந்திருக்கலாம் என்கிறார் பேராசிரியர் பிரபு.

