/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பத்தூர்
/
டிரைவரிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த மூவர் கைது
/
டிரைவரிடம் ரூ.10 லட்சம் பணம் பறித்த மூவர் கைது
ADDED : ஜூலை 25, 2025 02:23 AM

விக்கிரவாண்டி:விக்கிரவாண்டி அருகே லாரி டிரைவரிடம், 10.40 லட்சம் ரூபாய் பணம் பறித்த, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் வெள்ளக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சப்தகிரி, 32; லாரி டிரைவர். இவர், ஜூலை, 22ல் வேலை செய்யும் ஏ.வி.பி., முட்டை வியாபார கம்பெனியிலிருந்து, நாமக்கல் சென்று முட்டை லோடு ஏற்றி வர, 10.40 லட்சம் ரூபாயுடன் சென்றார்.
நேற்று முன்தினம் அதிகாலை, 4:00 மணிக்கு, விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு அருகே இயற்கை உபாதைக்காக லாரியை நிறுத்தினார். காரில் வந்த சிலர், அவர் முகத்தில் மிளகாய் பொடி துாவி, லாரியிலிருந்த பணத்தை எடுத்துகொண்டு தப்பினர்.
புகாரில், டோல் பிளாசாக்களில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், லாரியை சென்னையில் இருந்து, கார் ஒன்று, பின் தொடர்ந்தது தெரிந்தது. இதன் அடிப்படையில் போலீசார் ஆய்வில், அந்த கார் சென்னை, கோயம்பேடு கெஸ்ட் ஹவுஸ் எதிரில் நின்றிருந்தது கண்டறியப்பட்டது.
அங்கு விரைந்த போலீசார், மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர். விசாரணையில், முட்டை கம்பெனியில் ஏற்கனவே டிரைவராக வேலை செய்த, திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டை சேர்ந்த பிரவீன் கோயில்ராஜ், 32; என்பவர் என்பதும், அவருடன், சென்னையை சேர்ந்த சதீஷ், 40; மாடம்பாக்கத்தை சேர்ந்த முத்துக்குமார், 40; வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரிந்தது.
மூவரையும் கைது செய்த போலீசார், 9.50 லட்சம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கண்டுபிடித்த போலீசாரை, எஸ்.பி., சரவணன் பாராட்டினார்.