sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாய ஆலை இயங்கிவந்த வீட்டில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

/

சாய ஆலை இயங்கிவந்த வீட்டில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சாய ஆலை இயங்கிவந்த வீட்டில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சாய ஆலை இயங்கிவந்த வீட்டில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


ADDED : செப் 01, 2024 02:25 AM

Google News

ADDED : செப் 01, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், மண்ணரை பகுதியில் வீட்டில் ரகசியமாக இயங்கிய சாய ஆலையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து குழாய் இணைப்பு துண்டித்து, அபராதம் விதித்து, நோட்டீஸ் அளித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர், மண்ணரை சத்யா காலனியில் ஒரு வீட்டில் துணிகளுக்கு சாயமேற்றும் ஆலை ரகசியமாகச் செயல்பட்டு வந்தது. மாநகராட்சி குழாய் இணைப்பில் மோட்டார் இணைத்து நீரை அதிகளவில் உறிஞ்சி எடுத்து, இத்தொழிற்சாலை நடந்துள்ளது.

மேலும், சாயக்கழிவு நீர் குழாய் மூலம் மழை நீர் சேகரிப்புக்கு தோண்டிய குழியில் இறக்கப்பட்டும் பல்வேறு விதிமீறல்கள் நடந்துள்ளது. இது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருப்பூர் மாநகராட்சி 3வது மண்டல உதவி கமிஷனர் வினோத் தலைமையில், அதிகாரிகள் குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் போது, விதிமீறல்கள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, உரிய உரிமம் பெறாமல், குடியிருப்பு பகுதியில் தொழிற்சாலை நடத்தியது குறித்து, 3 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என, வீட்டின் உரிமையாளர்கள் சரோஜா, ரஞ்சித்குமார், சரவணகுமார் மற்றும் ரூபலட்சுமி ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

விதிமுறைக்கு புறம்பாகப் பயன்படுத்தியதால் குடிநீர் குழாய் இணைப்பு உடனடியாகத் துண்டிக்கப்பட்டது.மேலும் சாயக்கழிவு நீரை நிலத்தில் தேக்கியும், மாநகராட்சி வடிகாலில் வெளியேற்றி மாசு ஏற்படுத்தியதற்காக, 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

---

வில்லங்கச் சான்று பிழைத்திருத்தம்

நுாற்றுக்கணக்கில் மனு தேக்கம்

பல்லடம், செப் 1-

- பல்லடம் சார்-பதிவாளர் அலுவலகத்தில், வில்லங்கச் சான்று பிழைத்திருத்தம் செய்வற்காக வழங்கப்பட்ட மனுக்கள் நுாற்றுக்கணக்கில் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அலுவலகத்தில், தினசரி, நுாற்றுக்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையில் பத்திரப்பதிவு பணிகள் நடக்கும் அலுவலகங்களில், பல்லடம், கடந்தாண்டு முதல் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, அதிகளவிலான பத்திரப்பதிவு பணி நடக்கும் இந்த அலுவலகத்தில், வில்லங்க சான்று பிழைத்திருத்தம் செய்வதற்காக வழங்கப்பட்ட நுாற்றுக்கணக்கான மனுக்கள் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

வில்லங்கச் சான்றில் ஏற்படும் 'இன்டெக்ஸ் கரெக் ஷன்' எனப்படும் சிறுசிறு பிழைகளை திருத்தி அமைக்க வேண்டும். இல்லையெனில், வில்லங்க சான்றில் தவறாக காட்டும். இந்த பிழை திருத்தத்தை மேற்கொள்ள விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால், வங்கி கடன், கிரயம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஏதேனும், தொழில்நுட்ப கோளாறு உள்ளதா; அல்லது பத்திர அலுவலகத்தில் போதிய ஆட்கள் இல்லையா என்பது தெரியவில்லை. இது குறித்து பல்லடம் பத்திர அலுவலகத்தில் கேட்டாலும் முறையான பதில் இல்லை. மாவட்ட பதிவுத்துறை நிர்வாகம் இதில் தலையிட்டு, வில்லங்க சான்று பிழை திருத்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, விரைவில் கிடைக்க செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

---

மண் திருட்டை தடுத்த இளைஞர்களுக்கு கொலை மிரட்டல்

திருப்பூர், செப். 1-

மண் திருட்டை தடுத்ததால், கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, மண்ணரை அருகே, நெடுஞ்சாலைத்துறை கொட்டி வைத்திருந்த மண்ணை, லாரியில் வந்த சிலர் திருடி செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. வேர்கள் அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், 5வது முறையாக மண் அள்ளிய போது டூவீலர்களை லாரி முன் நிறுத்தி, கேள்வி எழுப்பினர்.

ஆத்திரமடைந்த லாரி டிரைவர் உள்ளிட்டோர், டூ வீலர்களை இடித்து, தன்னார்வ அமைப்பினரையும் தாக்கியுள்ளனர்.

மொபைல் போனை பறித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக, பாதிக்கப்பட்ட இளைஞர்கள், திருப்பூர் வடக்கு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நெடுஞ்சாலைத்துறையினர் தகவல் அறிந்து வந்ததும், மண்ணை கொட்டிவிட்டு, லாரியுடன் தப்பிச்சென்றனர். கொலை மிரட்டல் விடுத்தால், இளைஞர்கள் வடக்கு போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து வந்து, விசாரித்தனர். அனுமதி இல்லாமல் மண் அள்ளி சென்றது; யாருக்கு மண் விற்கப்பட்டது என்று விசாரித்தனர். அப்போது, மண் கடத்தலில் ஈடுபட்டவருக்கு ஆதரவாக, ஒரு அரசியல் கட்சியை சேர்ந்த சிலர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் வேர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சந்தீப் கூறுகையில், ''திருப்பூரில் தன்னார்வலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. மண் கடத்தலை தட்டிக்கேட்டதால், கொலை மிரட்டல் விடுத்தனர்; இதுதொடர்பாக, வடக்கு போலீசில் புகார் அளித்துள்ளோம்,'' என்றார்.

-----

இருபாலர் டென்னிஸ் போட்டி

திருப்பூர், செப். 1-

திருப்பூர், தெற்கு குறுமைய இருபாலர் டென்னிஸ் போட்டி, சின்னாண்டிபாளையம், ஓம் ஸ்ரீ பேட்மின்டன் கிளப்பில் நேற்று நடந்தது.

மாணவர் பிரிவு


தனிநபர், 14 வயது பிரிவு; பிளாட்டோஸ் அகாடமி முதலிடம்; பிரன்ட்லைன், 2வது இடம். இரட்டையர், பிளாட்டோஸ் பள்ளி முதலிடம், கிட்ஸ் கிளப் பள்ளி, 2வது இடம், 17 வயது தனிநபர், இரட்டையர் இரண்டிலும் பிளாட்டோஸ் பள்ளி முதலிடம், கிட்ஸ் கிளப், 2 வது இடம். 19 வயது தனிநபரில் பிளாட்டோஸ் பள்ளி, இரட்டையரில் பிரன்ட்லைன் பள்ளி முதலிடம். இரண்டு பிரிவிலும், பிரன்ட்லைன் பள்ளி, 2 வது இடம்.

மாணவியர் பிரிவு


பதினான்கு வயது, தனிநபர், இரட்டையர் இரண்டிலும் பிளாட்டோஸ் முதலிடம், கிட்ஸ் கிளப், 2 வது இடம். 17 வயது பிரிவில், தனிநபர், இரட்டையர் இரண்டிலும் பிளாட்டோஸ் பள்ளி முதலிடம், தனிநபரில் செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி, இரட்டையரில் கிட்ஸ் கிளப் பள்ளி, 2 வது இடம்.

----

பாமாயில் வழங்குவதை முறைப்படுத்துங்க

திருப்பூர், செப். 1-

சிறப்பு பொது வினியோக திட்டத்தில், துவரம்பருப்பு, பாமாயில் வழங்குவதை முறைப்படுத்த வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், சிறப்பு பொது வினியோக திட்டத்தில், துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களாக, ரேஷன் கடையில், இப்பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால், பொதுமக்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர் மத்தியில் கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன மாநில துணை பொதுசெயலாளர் கவுதமன் கூறியதாவது:

துவரம்பருப்பு, பாமாயில் கிடைக்காமல், மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொருட்கள் கேட்டு வரும் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல், விற்பனையாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

எனவே சரியான முறையில், இப்பொருட்களை வழங்க வேண்டும். பருப்பு, பாமாயில் கிடைக்காதoர், அடுத்தமாதம் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துவிட்டு, பொருட்களை அனுப்பி வைப்பதில்லை. அந்தந்த மாத்துக்கு உரிய பொருட்களை முறையாக வினியோகிக்க வேண்டும். சர்வர் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

---

ஓரிகாமி: மாணவன் அசத்தல் சாதனை

திருப்பூர்:

ஒரு சிறிய அறைக்குள், விளையாட்டுத்தனமாய் துவங்கும் சில பழக்கம், ஒரு காலகட்டத்தில் பலரையும் வியக்க வைக்கும் சாதனையாக உருவெடுக்கும். அந்த சாதனை, உலகையே திரும்பி பார்க்கவும் செய்யும்.

இப்படிதான், திருப்பூர், கல்லாங்காடு பகுதியில் வசிக்கும் அங்குசாமி - சிந்து தம்பதியின் மகன் தமிழ் இனியன், 10. கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார்.

திருப்பூர் பிரன்ட்லைன் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும் தமிழ் இனியனுக்கு, 'ஓரிகாமி' கலையின் மீது மிகுந்த ஆர்வம். இதை ஊக்குவிக்க துவங்கினார் அவரது தாய் சிந்து. இதுதொடர்பான பயிற்சிகளை தொடர்ந்து வழங்கினார்.

''வீட்டில் சும்மா இருக்கும் போது, ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து மடித்துக் கொண்டே இருப்பான், தமிழ் இனியன். பள்ளி விடுமுறை நாளில், 'ஓரிகாமி' கலையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அவரது தாய் மாமன், கவுதம், அதற்கான ஊக்குவிப்பை வழங்கினார்.

யோகா பயிற்றுனரான அவர் ஏற்கனவே யோகா கலையில் சாதனை நிகழ்த்தியுள்ள நிலையில், அந்த அனுபவத்தை வைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சி, பயிற்சியில் அவரை ஈடுபடுத்தினார்,'' என்கிறார் அங்குசாமி.

பள்ளி விடுமுறை நாட்களில், கின்னஸ் சாதனைக்கான முயற்சியை மேற்கொண்டார். வண்ணவண்ண காகிதத்தை மடித்து, நாய்க்குட்டி உட்பட பல வடிவத்தை ஏற்படுத்தினார். மொத்தம், 2,100 வடிவங்களை வெட்டி, ஒட்டி காட்சிப்படுத்தினார். இது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

அவரது மாமா கவுதம் செல்ராஜ், இந்த சாதனைக்கு துணையாக இருந்தார். 1,500 வடிவங்களை உருவாக்கியது தான், முந்தைய சாதனையாக இருந்துள்ளது. இதை தமிழ் இனியன் முறியடித்துள்ளார்.

---

சர்வதேச தர மைதானம்

இன்னும் பெரும் கனவு

திருப்பூர்:

அரசுப்பள்ளி மாணவ, மாணவியரின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்க, அரசின் சார்பில் விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது, திருப்பூர் நகரில் உள்ள விளையாட்டு ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுனர்களின் ஆவலாக இருந்து வருகிறது.

அவர்களின் ஆவலை நிறைவேற்றி, ஆதங்கத்தை போக்கும் வகையில், திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லுாரி பின்புறம், 11 ஏக்கர் நிலத்தில், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இதற்காக, அரசு மற்றும் உள்ளூர் நிதி திட்டத்தின் கீழ், 18 கோடி ரூபாய்க்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு, முதல் கட்டமாக, அரசின் சார்பில், 9 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டது. இதில், அரங்கம் மற்றும் மைதான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

உடற்பயிற்சி கூடம், 400 மீ., தடகள ஓடு பாதை, கால்பந்து மைதானம், டென்னிஸ், வாலிபால், கூடைப்பந்து, ஹாக்கி, ேஹண்ட்பால், கபடி விளையாட்டுக்கான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. ஆனால், இப்பணிகள் பாதியில் நிற்கிறது. உள்ளூர் நிதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் தான், பணி தொடர்வதில் தடுமாற்றம் தென்படுகிறது எனக் கூறப்படுகிறது.

'மைதானம் உருவானால், இன்னும் பல வீரர்கள், தங்கள் திறமையை பட்டைத்தீட்டிக் கொள்ள முடியும். இந்த ஒரு மைதானம் மட்டுமல்ல, இன்னும் ஓரிரு இடங்களில் மைதானம் அமைத்தால் கூட, இன்னும் ஏராளமான வீரர், வீராங்கனைகளை விளையாட்டு உலகில் பிரகாசிக்க செய்ய முடியும் என்கின்றனர்' விளையாட்டு பயிற்சியாளர்கள்.

அரசுக்கு கடிதம்

திருப்பூர் மாவட்டத்தில் விளையாட்டு செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன; மாணவ, மாணவியர் ஆர்வமுடன் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுத்து வருகின்றனர். சிக்கண்ணா கல்லுாரி வளாகத்தில், அரசு - உள்ளூர் நிதி திட்டத்தில் திறந்தவெளி மைதானம் அமைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அரசு ஒதுக்கிய, 9 கோடி ரூபாயில் பணிகள் நடந்து முடிந்துள்ளன. உள்ளூர் நிதி, 9 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் பட்சத்தில் பணி துவங்கும். இதுகுறித்து, அரசுக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்.

- ரகுகுமார்,

மாவட்ட விளையாட்டு அலுவலர்.

-----

வீராங்கனையர் ஆர்வம்

திருப்பூர், செப். 1-

நத்தக்காடையூரில் நடந்த எஸ்.ஜி.எப்.ஐ., மண்டல அணி தேர்வுக்கு, நான்கு மாவட்டங்களில் இருந்து, 685 வீராங்கனையர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், கூடைப்பந்து, ேஹண்ட்பால், கபடி மண்டல அணிக்கான வீராங்கனையர் தேர்வு, காங்கயம் அடுத்த நத்தக்காடையூர், பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில் நேற்று நடந்தது.

முன்னதாக தேர்வு போட்டியை கல்லுாரி முதல்வர் ராம்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், அவிநாசி அரசு கலைக்கல்லுாரி உடற்கல்வி இயக்குனர், பிரசன்னாகுமார் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன் போட்டி, முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செந்திலதிபன் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின் படி, ஈரோடு, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த வீராங்கனையர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயது பிரிவு கூடைப்பந்து அணி தேர்வுக்கு, 155 பேர், எறிபந்து போட்டி - 210, கபடி - 320 பேர் என மொத்தம், 685 பேர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 140 வீராங்கனையர் பங்கேற்றனர்.

-----

விவசாயிகள் போராட்டம்

திருப்பூர், செப். 1-

வெள்ளகோவில் ஒன்றியம், வீரணம்பாளையம் ஊராட்சி பகுதிகளில், வெறிநாய் மற்றும் தெருநாய் தொல்லை அதிகரித்தது. இந்த கிராமப்புறங்களில், கடந்த ஆறு மாதங்களில், 2 ஆயிரம் ஆடுகளை வெறிநாய் கடித்து, பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பை அருகே, ஒரே இடத்தில் ஏழு ஆடுகளை தாக்கி, வெறிநாய்கள் கொன்றுள்ளன. அதே பகுதியில், ஒரு வாரத்துக்கு முன், 20 ஆடுகள், நாய்களால் பலியாகின. நாய்களை அகற்ற முற்பட்டவர்கள் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெருநாய்களிடம் இருந்து, ஆடுகளை காப்பாற்ற போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும். நாய்கள் கடித்து, ஆடுகள் இறப்பதை தடுக்க, சரியான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று விவசாயிகள் போராட்டம் அறிவித்தனர்.

இறந்த ஆடுகளுடன் வந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகம் முன்பு, ஏழு இறந்த ஆடுகளை வைத்து, போராட்டம் நடத்தினர். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே திரும்பி செல்வோம் என்று அறிவித்து, ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில், விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களும் பங்கேற்றன. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென, கலெக்டர், நிர்வாகிகளிடம் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

---

பின்னலாடை கண்காட்சி

திருப்பூர் ஆயத்தம்

திருப்பூர், செப். 1-

பசுமை சார் உற்பத்தி, வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு திருப்பூர் தயாராக உள்ளது. வரும் 4ம் தேதி துவங்க உள்ள 51வது இந்தியா சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி, இதைப் பறைசாற்றும் வகையில் அமைய உள்ளது. கண்காட்சியின் ஒரு பகுதியாக இளம் தலைமுறையினரை தொழில் மேம்பாட்டுக்கு அழைக்கும் வகையிலான கருத்தரங்கும் நடைபெற உள்ளது.

இந்தியா நிட்பேர் அசோசியேஷன்(ஐ.கே.எப்.ஏ.,), ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இணைந்து, இந்தியா சர்வதேசப் பின்னலாடை கண்காட்சிகள் 50 முறை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், பழங்கரையில் உள்ள ஐ.கே.எப்., வளாகத்தில், 51வது இந்தியா சர்வதேசப் பின்னலாடை கண்காட்சி, வரும் செப்., 4ல் துவங்கி 6ம் தேதி வரை நடக்கிறது.

பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டும்; சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகளில் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும், பருவநிலை மாற்றத்தால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பூமியை பாதுகாக்க மறுசுழற்சி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை மையமாக இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இளம் தலைமுறைக்கு அறைகூவல்

கண்காட்சி குறித்து, இந்தியா நிட்பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் பகிர்ந்துகொண்ட தகவல்கள்:

பசுமை சார் உற்பத்தி படிநிலைகளை விளக்கி, இரண்டு முறை வீடியோ கான்பரன்ஸ் நடத்தியிருக்கிறோம். சமீப காலமாக ஏற்றுமதி மட்டுமல்ல, திருப்பூர் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கும் அதிகளவு ஆர்டர் கிடைத்து வருகிறது. கண்காட்சியில், 'பிராண்டட்' நிறுவனங்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியின் ஒரு பகுதியாக, நான்கு கருத்தரங்குகளும் நடத்தப்பட உள்ளது. இளம் தலைமுறையினரை தொழில் மேம்பாட்டுக்கு அழைக்கும் வகையிலான கருத்தரங்கும் இடம்பெறும். வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தியை விளக்கும் வகையில், 51வது இந்தியா சர்வதேச பின்னலாடை கண்காட்சி நடத்தப்படும்.

'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்'

ஐரோப்பியாவின் மற்றொரு எதிர்பார்ப்பு, 'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்' என்ற வில்லை, 'டி-சர்ட்'டில் பொருத்தப்படும்; இதை 'ஸ்கேன்' செய்தால், பஞ்சு மற்றும் நுால் வாங்கிய விவரம், சாயமிடப்பட்ட அனைத்து விவரம், பிரின்டிங் மற்றும் எம்ப்ராய்டரிங் செய்த விவரம் என, அனைத்து விவரங்களும் தெரியவரும்.

அதற்காகவே, ஒவ்வொரு ஆடைகளுக்கும், 'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்' என்ற அடையாள அட்டை பொருத்தவும் திருப்பூர் தயாராகிவிட்டது. ஐரோப்பாவின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்; அதற்கான முயற்சிகளை, நாங்கள் கூட்டாக மேற்கொண்டு வருகிறோம்.

ஏழு நகரங்களில் கருத்தரங்கு

'டிஜிட்டல் பாஸ்போர்ட் புராடக்ட்' திட்டத்துக்கு நாம் தயாராகும் வகையில், நாட்டில் உள்ள, ஏழு கிளஸ்டர்களில், கருத்தரங்கு நடத்தப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அதிகம் பேர் பங்கேற்று, விழிப்புணர்வு பெற்றுள்ளனர். இனி, அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். ஐரோப்பா உட்பட, வளர்ந்த நாடுகள் எதிர்பார்க்கும் பசுமை சார் உற்பத்தி மற்றும் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்திக்கு திருப்பூர் 'ரெடி' என்பதை, வர்த்தகர்களிடம் எடுத்துரைக்கும் வகையில், 51வது ஐ.கே.எப்., கண்காட்சி அமையும்.

'டெக்ஸ்டைல் எக்சேஞ்ச்'

அமைப்பினர் பங்கேற்பு

உலக அளவில், 1000 அமைப்புகள் ஒருங்கிணைந்து, 'டெக்ஸ்டைல் எக்சேஞ்ச்' என்ற அமைப்பு இயங்குகிறது. ஜவுளித்துறையை, அடுத்தகட்டத்துக்கு உயர்த்த, இவ்வமைப்பு முயற்சித்து வருகிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், இதில் உறுப்பினராக இணைந்துள்ளது. 'டெக்ஸ்டைல் எக்ஸ்சேஞ்ச்' அமைப்பினருக்கும், கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.

இவ்வாறு, அவர் கூறினார்.

'புளூசைன் லேபிள்'

தனி அந்தஸ்து

''ஐரோப்பிய நாடுகளில், 2027ம் ஆண்டில் இருந்து, பசுமை சார் உற்பத்தி சட்டம் அமலுக்கு வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உற்பத்தி செய்தால் மட்டுமே, அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய முடியும்.

திருப்பூர் பின்னாடை நகரம், 15 ஆண்டுகளுக்கு முன்பாகவே, பசுமை உற்பத்திக்கு மாறிவிட்டது. நமது தனித்துவத்தை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக, சுவிட்சர்லாந்து 'புளூசைன்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

ஏற்றுமதியாளர்களின் வர்ததகர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி, உற்பத்தி படிநிலைகளை ஆராய்ந்து, 'புளூசைன் லேபிள்' பயன்படுத்த ஏற்பாடு செய்யப்படும். 'புளூசைன் லேபிள்' ஆடைகளில் இருந்தால், சர்வதேச சந்தைகளில் நமக்கு தனி அந்தஸ்து கிடைக்கும்'' என்றார் சக்திவேல்.

---

அரசுப்பணி மீது பெண்கள் ஆர்வம்

திருப்பூர்:

வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் ஒரு வகையில் கல்விதான். அதுவும், பள்ளி படிப்பு முடித்து, கல்லுாரி படிப்பு கடந்து, வேலை வாய்ப்பு என்ற நிலை வரும் போது தான், பலரும், பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். தற்போதைய போட்டி நிறைந்த உலகில் ஏழை, நடுத்தர குடும்பப் பிள்ளைகளுக்கு, அரசுப்பணி என்பது தான் நம்பிக்கை.

அவர்களுக்கு வழிகாட்டியாக மாறியிருக்கிறது, திருப்பூர் வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். இம்மையத்தின் சார்பில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், போட்டி தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.

திருப்பூர் மட்டுமின்றி பல்லடம், அவிநாசி, காங்கயம், உடுமலை என மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், போட்டி தேர்வெழுத விண்ணப்பிக்கும் தேர்வர்கள் இங்கு பயிற்சி பெற வருகின்றனர்.

கடந்த முறை நடந்த குரூப் - 2 தேர்வில், இங்கு பயின்றவர்களில், 9 பெண் உட்பட, 13 பேர் தேர்ச்சி பெற்று, கருவூலம், பள்ளிக்கல்வி, போக்குவரத்து, வருவாய், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், நிதித்துறை, கூட்டுறவு, வேலை வாய்ப்பு பயிற்சித்துறை உள்ளிட்ட துறைகளில் பணிநியமனம் பெற்றனர்.

200 பேர் பயிற்சி


திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ்குமார் கூறியதாவது:

போட்டி தேர்வுக்கு தொடர்ச்சியாக வகுப்பு நடத்தி வருகிறோம். கலெக்டர் அலுவலகத்தின், 7வது தளத்தில், நுாலகமும் உள்ளது. கலெக்டரின் முயற்சியால், போட்டி தேர்வுக்குரிய 'அப்டேட்' செய்யப்பட்ட புத்தகங்கள், வினா வங்கி உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

இது மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறது; தற்போது, 200 பேர்பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி பெற வரும் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.

நான் கூட, குரூப்-1 தேர்வெழுதி தான் இந்த பணிக்கு வந்தேன். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களில், 80 சதவீதம் பேர் போட்டி தேர்வு வாயிலாக பணிக்கு வந்தவர்கள் தான்.

அவர்கள் பயிற்சி பெற வரும் போட்டி தேர்வர்களுக்கு நம்பிக்கையாக உள்ளனர்; தங்களின் அனுபவத்தின் மூலம் கிடைத்த ஆலோசனையை வழங்குகின்றனர். 70 சதவீதத்தினர் பெண்கள்

குறிப்பாக, திருமணமாகி, குழந்தை பிறந்த பின்னரும் கூட, போட்டி தேர்வெழுதி வெற்றி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி செய்யும் பெண் அலுவலர்கள் சிலர் உள்ளனர். அவர்கள் போட்டி தேர்வெழுத வரும் பெண் தேர்வர்களுக்கு நிஜ நம்பிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

திருமணமாகிவிட்டால் வீடுகளில் முடங்கிவிட வேண்டியது தான் என்ற பொதுவான மனநிலை, இவர்களை போன்றவர்களால் தகர்க்கப்படுகிறது; பயிற்சி பெறுவோரில், 70 சதவீதம் பேர் பெண்கள் தான் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

போட்டி தேர்வர்களுக்கு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறை சார்ந்த கூட்டங்கள் நடத்த பயன்படுத்தப்படும் பிரதான அரங்கையே போட்டி தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு நடத்த கலெக்டர் அனுமதி வழங்குகிறார்; தேர்வர்க ளுக்கு தேவையான வசதி, வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில், கலெக்டர் ஆர்வம் காட்டுகிறார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

---

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்துக்கு வரவேற்பு

பல்லடம், செப். 1-

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தை வரவேற்பதுடன், அதனை தன்னார்வலர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து அதன் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

நீர்வளத்துறை சார்பில், பல்லடம் சட்டசபை தொகுதியிலுள்ள இச்சிப்பட்டி, கேடங்கிபாளையம், அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள குளம் குட்டைகளுக்கு, சாமளாபுரத்தில் உறை கிணறு அமைத்து, நீரேற்று முறையில் நீரைக் கொண்டு சென்று, 12 குளம் குட்டைகளில் நிரப்பி, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது.

விவசாயிகளுக்கு பயனளிக்கும் இத்திட்டத்தை வரவேற்கிறோம். இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, பல்லவராயம்பாளையம் குட்டைக்கும் கொண்டு செல்வதன் மூலம், ஏராளமான கிராமங்கள் இதில் பயன்பெறும். மேலும், தன்னார்வலர்கள் பலர் ஏற்கனவே திட்டத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொண்ட நிலையில், பல இடையூறுகள் காரணமாக தடைபட்டது.

அரசு அனுமதி வழங்கி, அரசு அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கும் பட்சத்தில், தன்னார்வலர்கள் இத்திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு உள்ளது. இதற்காக அரசு நிதியை ஒதுக்கி வீணடிப்பது தேவையற்றது. எனவே, மாவட்ட நிர்வாகம், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து, இதுதொடர்பாக ஆலோசித்து செயல்பட வேண்டும்.

இதேபோல், சூலுார் குளத்தை முழுமையாக தூர்வாரி, நீரை கொண்டு வருவதால், கரடிவாவி, பருவாய், செம்மிபாளையம், சுங்கம்பாளையம் உள்ளிட்ட பல்லடத்தின் மேற்கு பகுதி கிராமங்களும் பயனடையும். எனவே, இது குறித்தும் மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

--

டோல்கோட் அமைகிறது

பல்லடம், செப். 1--

பல்லடம் -- வெள்ளகோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் துவங்கியது. விரிவாக்க பணிகள் நிறைவடைந்த இடங்களில், மைய தடுப்புகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, பல்லடம் அருகேயுற்ள மாதப்பூர் பகுதியில், புதிதாக 'டோல் கேட்' அமைக்கும் பணி துவங்கி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை, இருவழிச்சாலையாக இருந்த காலகட்டத்தில், 'டோல் கேட்' அமைக்கப்பட்டது. விவசாயிகள், பொதுமக்கள் பலரின் எதிர்ப்பைத் தொடர்ந்து, மூடப்பட்டது. அதன்பின், பல ஆண்டுகளாக டோல்கேட் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டது. ரோடு விரிவாக்க பணி துவங்கிய போதே, பழைய டோல் கேட் கட்டுமானங்கள் இடித்த அகற்றப்பட்டன தற்போது, மீண்டும் அதே இடத்தில், புதிதாக டோல்கேட் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

---

கடல் நீச்சல்: சாதித்த திருப்பூர் சிறுவன்

திருப்பூர்:

புதுவையில் நடந்த மாநிலங்களுக்கிடையேயான கடல் நீச்சல் போட்டியில் திருப்பூர், சாய் கிருபா சிறப்புப்பள்ளி மாணவர் அபினவ், 16 முதலிடத்தை பெற்று தங்கப்பதக்கத்தை ஈட்டியிருக்கிறார். ஆறு ஆண்டுகளாக நீச்சல் பயிற்சியைப் பெற்றதன் மூலம், இந்தச் சாதனையை, அபினவ் சாத்தியமாக்கியிருக்கிறார். இதைச் சாத்தியமாக்கியுள்ள திருப்பூர் சாய்கிருபா சிறப்பு பள்ளி நிர்வாகத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நீச்சல் குளம், ஏரிகளில் நீந்துவதே கடினம். ஆனால், சிறப்பு பள்ளி மாணவரோ, கடலில் நீந்தி முத்துக்குளித்திருக்கிறார்.

சாய் கிருபா சிறப்பு பள்ளி இயக்குனர் கவின் திருமுருகன் நம்மிடம் பகிர்ந்தவை...

சிறப்பு பள்ளியில் சேரும் 'ஆட்டிசம்' பாதித்த குழந்தைகளை, இயல்பான குழந்தைகளாக மாற்றி, அடிப்படைகல்வி அளிக்கிறோம். தனிமனிதர் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு திறமை பெற்றவர்களாக இருப்பர். அந்த திறமை என்ன என்பதை அறிந்து பயன்படுத்த தெரிவதில்லை. அறிந்து பயன்படுத்துபவர் வெற்றியாளராக மாறுகின்றனர். அதற்காகவே, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுகளையும் கற்பிக்கிறோம்; போட்டிகளில் பங்கேற்கஊக்குவிக்கிறோம்.

அபினவ்க்கு தண்ணீரில் விளையாடுவது பிடிக்கும். அதைப் பயன்படுத்தியே, நீச்சல் கற்றுக்கொடுத்தோம். கேரளாவில் சென்று கடல் நீச்சல் பயிற்சியும் அளித்தோம். அபினவ் முதல் பரிசு பெற்று வந்துள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது.

நீச்சல் மட்டுமல்ல, கராத்தே 'ஸ்கேட்டிங்', யோகா போட்டிகளில் எங்கள் மாணவர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர். வாலிபால், கால்பந்து பயிற்சியும் அளித்து வருகிறோம். சிறப்பு பள்ளி மாணவர்கள், விளையாட்டு பயிற்சிகளால் சிறப்பு வாய்ந்தவர்களாக அவதாரம் எடுப்பர் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு, கவின் திருமுருகன் கூறினார்.






      Dinamalar
      Follow us