ADDED : ஜூலை 25, 2011 09:23 PM
அவிநாசி : அவிநாசி ஒன்றிய வடக்கு பகுதியில் கன மழை பெய்தது.அவிநாசி ஒன்றிய வடக்கு பகுதியான சேவூர், பாப்பாங்குளம், மங்கரசவலையபாளையம், ஆலத்தூர் உள்ளிட்ட பல ஊராட்சிகளில் நேற்று முன்தினம் மாலை கன மழை பெய்தது; 26 மி.மீட்டராக பதிவாகி இருந்தது.
சேவூர் சுற்றுப்புற பகுதியில், பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல பகுதிகளில் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தன. மழை காரணமாக சேவூர் குளத்துக்கு ஓரளவு தண்ணீர் வந்தது.விவசாயிகள் கூறுகையில், 'தற்போது ஆடிப்பட்ட பருவத்துக்கு உழவு பணியை துவக்கியுள்ளோம். தொடர்ச்சியாக மழை பெய்தால் ஏற்கனவே பயிரிட்டுள்ள பயிர்களுக்கு ஏற்றதாக இருக்கும். தொடர்ந்து மழை வரும் என்று நம்புகிறோம்,' என்றனர்.அவிநாசி வேளாண் உதவி இயக்குனர் சுந்தர்ராஜன் கூறுகையில், ''இம்மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது பயிரிட்டுள்ள மஞ்சள், நிலக்கடலை, வாழைக்கு மிகவும் ஏற்றது. இரண்டாம் கட்டமாக நிலக்கடலை, பாசிப்பயறு பயிரிடலாம்,'' என்றார்.திருப்பூர்: திருப்பூர் சுற்றுப் பகுதியில் நேற்று முன்தினம் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், ரோடுகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கியது. நேற்று காலையில் இருந்தே வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலுக்கு மேல் கருமேகம் சூழ்ந்து, பலத்த மழை பெய்வது போன்ற தோற்றம் காணப்பட்டது. தொடர்ந்து குளிர் காற்றும் எப்போது வேண்டுமானாலும் பலத்த மழை பெய்யலாம் என்ற நிலையும் காணப்பட்டது. பள்ளி, கல்லூரியிலிருந்து செல்லும் மாணவர்களும், அலுவலகம் சென்று திரும்பு வோரும் ஓட்டமும் நடையுமாக வீட்டுக்கு வேகமாகச் சென்றனர். மாலை 5.30 மணிக்கு மேல் தூறல் விழத்துவங்கியது. மழையளவு: திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம், மூலனூர், உடுமலை மற்றும் காங்கயத்தில் மழை அளவு பதிவு செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் திருப்பூரில் 12 மி.மீ., அவிநாசியில் 26 மி.மீ., அளவும் மழை பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் மழை பெய்யவில்லை.