/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2,540 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 12,579 அலுவலர்கள்
/
2,540 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 12,579 அலுவலர்கள்
2,540 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 12,579 அலுவலர்கள்
2,540 ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய 12,579 அலுவலர்கள்
ADDED : மார் 25, 2024 12:50 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. லோக்சபா தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி, மாவட்டத்திலுள்ள 2,540 ஓட்டுச்சாவடிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 12,579 பேர் பணிபுரிய உள்ளனர்.
ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுப்பதிவு அலுவலர் -1, 2, 3 முதலான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, நான்கு கட்ட பயிற்சி வகுப்பு அளிக்கப்படுகிறது. முதல்கட்ட பயிற்சி வகுப்பு, அந்தந்த சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பள்ளி, கல்லுாரிகளில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் வடக்கு சட்டசபை தொகுதிக்கு, அங்கேரிபாளையம் கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியிலும்; திருப்பூர் தெற்கு சட்டசபை தொகுதிக்கு, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.
ஜெய்வாபாய் பள்ளியில் நடைபெற்ற பயிற்சிவகுப்பை, கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தனர்.
ஓட்டுச்சாடி அலுவலர்களாக பணிபுரியும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் 40 பேர் வீதம், தனித்தனி வகுப்பறைகளில் அமர வைக்கப்பட்டு, வகுப்பு நடத்தப்பட்டது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு, ஆகியவற்றை ஒன்றோடொன்று இணைப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மாதிரி ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்பட்டு, தேர்தல் நாளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தபால் ஓட்டுக்கு தயார்
தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், தபால் ஓட்டளிக்க தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பயிற்சி முகாமின் ஒருபகுதியாக, தபால் ஓட்டுகோரும் படிவம் 12 டி வழங்கப்பட்டது.
பயிற்சியில் பங்கேற்ற அரசு அலுவலர்கள், தபால் ஓட்டுக்கான படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.
ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பெட்டியிலிருந்து எடுத்து, உரிய இடத்தில் வைத்து பொருத்தவேண்டும். பேலட் யூனிட்டுடன் வி.வி., பேட்; வி.வி.பேட் உடன் கன்ட்ரோல் யூனிட் என்கிற வரிசையில் இணைக்கவேண்டும்.
தேர்தல் முகவர்களின் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி முடித்தபின், ஓட்டுப்பதிவு துவங்கவேண்டும். தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள 11 வகை அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வைத்தே வாக்களிக்க முடியும். எந்த ஆவணத்தை கொண்டு ஓட்டளித்தார் என்கிற விவரத்தை தவறாமல் குறிப்பிடவேண்டும்.
ஓட்டுச்சாவடிக்குள், வேட்பாளர்களின் முகவர்களை, கட்சி சின்னங்கள், வேட்பாளரின் சின்னம், தலை வர்களின் புகைப்படங்கள் பயன்படுத்த அனுமதிக்க கூடாது. ஒரே நேரத்தில், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் ஒரு முகவரை தவிர கூடுதல் முகவர்கள் இருக்கக்கூடாது.
வாக்காளர்கள், வாக்காளருடன் வரும் அவரது கைக்குழந்தை, ஓட்டுப்பதிவு அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளரின் முகவர்கள், கண்பார்வையற்ற அல்லது பிறர் உதவியின்றி நடக்க முடியாதவருடன் வரும் ஒருநபர் ஆகியோரை மட்டுமே அனுமதிக்கவேண்டும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, பதிவான மொத்த ஓட்டுக்கள் குறித்து மண்டல அலுவலருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். வாக்குச்சாடி அலுவலர்கள், எவ்வித பதட்டமும் இன்றி, திறம்பட செயல்படவேண்டும்.
இவ்வாறு, பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.

