/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளஸ் 2 தேர்வு எழுதும் 26,242 பேர்
/
பிளஸ் 2 தேர்வு எழுதும் 26,242 பேர்
ADDED : மார் 03, 2025 04:16 AM

திருப்பூர் திருப்பூர் மாவட்டத்தில் இன்று துவங்க உள்ள பிளஸ் 2 பொதுதேர்வை 26, 242 மாணவ, மாணவியர் எழுத உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கி வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில், 217 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும், 25 ஆயிரத்து, 863 மாணவ, மாணவியர்; தனித்தேர்வர் 379 பேர் என, 26 ஆயிரத்து, 242 பேர் தேர்வு எழுத உள்ளனர். பிளஸ் 1 தேர்வு, 5ம் தேதி துவங்கி, 27 ம் தேதி வரை நடக்கிறது; 27 ஆயிரத்து, 565 பேர் எழுதுகின்றனர்.
இதற்காக அமைக்கப்பட்டுள்ள 92 தேர்வு மையங்களுக்கென முதன்மை கண்காணிப்பாளர்களாக, 184 பேரும், அறை கண்காணிப்பாளராக, 1,500 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கலெக்டர் தலைமையில் தனிக்குழு; மாவட்ட கல்வி அலுவலர் மூலம் 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வித்துறை அலுவலர்கள் நேற்று இறுதிகட்ட சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டனர். தேர்வுக்கு வரும் மாணவர்கள் வரவேண்டிய நேரம், தேர்வறைக்கு செல்ல வேண்டிய நேரம் குறித்த அறிவிப்புகள், தேர்வு மையங்களில், மாணவர் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
தேர்வறையில் மாணவ, மாணவியர் சோதனை செய்யப்படுவர்; அனுமதியற்ற துண்டு காகிதங்கள், மொபைல் போன் வைத்திருந்தாலோ, வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பரிமாற்றம் செய்வது, ஆள்மாறாட்டம் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டாலோ, மாணவர்கள் ஓராண்டு முதல், ஐந்தாண்டுகள் வரை அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மதிப்பெண் சான்றிதழ் ரத்து செய்யப்படும்.
மாணவ, மாணவியர் தேர்வு மையத்துக்கு, 9:30 மணிக்கே சென்றுவிட வேண்டும். வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையை பார்த்து, தங்கள் தேர்வு எண் இடம்பெற்றுள்ள அறையை கண்டறிய வேண்டும்.
தேர்வு அறைக்கு சென்று, தங்கள் தேர்வுஎண் எழுதப்பட்டுள்ள இடத்தில் அமர வேண்டும். பிறகு, கண்காணிப்பாளர்கள் வழிகாட்டுதலுடன், தேர்வு எழுத துவங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.