/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள்! நாற்றுப்பண்ணையில் வினியோகிக்க தயார்
/
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள்! நாற்றுப்பண்ணையில் வினியோகிக்க தயார்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள்! நாற்றுப்பண்ணையில் வினியோகிக்க தயார்
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 30 ஆயிரம் மரக்கன்றுகள்! நாற்றுப்பண்ணையில் வினியோகிக்க தயார்
UPDATED : மார் 11, 2025 10:40 PM
ADDED : மார் 11, 2025 09:37 PM

உடுமலை,: தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், நடப்பாண்டுக்காக 30 ஆயிரம் மரக்கன்றுகள் உடுமலை ஒன்றிய நாற்றுப்பண்ணையில் ஊராட்சிகளுக்கு வினியோகிக்க தயார் நிலையில் உள்ளன.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், ஊராட்சிகளில் மரக்கன்று வளர்ப்பு திட்டமும் உள்ளது. சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், இயற்கையை பாதுகாக்கவும், மரக்கன்று வளர்ப்பு திட்டம், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
அரசின் சார்பில், மரக்கன்றுகள் வளர்ப்புக்கான நாற்றுப்பண்ணைகள் அமைப்பதற்கு, நிதிஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் நியமிக்கப்படும் பணித்தள பொறுப்பாளர்கள், இந்த பண்ணைகளை மேற்பார்வையிட்டு, பணிகளை கவனிக்கின்றனர். உடுமலை ஒன்றியத்தில், போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே நாற்றுப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலங்களில், மரக்கன்று நடும் பணி தீவிரப்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு நிதியாண்டிலும் இத்திட்டத்துக்கென குறிப்பிட்ட தொகை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டுக்கான தொகை ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் நிதியாண்டின் துவக்கத்தில் மரக்கன்றுகள் தயார்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டது. தாமதமாக சில மாதங்களுக்கு முன்பு திட்டத்துக்கு நடப்பாண்டிற்கு, 9 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, தற்போது மரக்கன்றுகள் தயார்நிலைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை ஊராட்சிகளுக்கு வினியோகிக்கப்படும். உடுமலை ஒன்றியத்தில், நடப்பாண்டில் 35 ஆயிரம் மரகன்றுகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது நாற்றுப்பண்ணையில், 30 ஆயிரம் கன்றுகள் தயாராக உள்ளன.
மாவட்ட நிர்வாகம் அறிவுரை
பணித்தள பொறுப்பாளர்கள் கூறியதாவது:
நடப்பாண்டுக்கான மரக்கன்றுகள் ஓரளவு வரை தயார்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. வேம்பு, பூவரசம், நாவல் மரம், புங்கன், நெல்லி, புளியம், எலுமிச்சை, மாதுளை, சீதாப்பழம், பலா மரம், பாதாம், பப்பாளி உள்ளிட்ட மரங்கன்றுகள் உள்ளன.
விவசாயிகள் அவ்வப்போது வந்து பெற்று செல்கின்றனர். நடப்பாண்டு முதல் மரக்கன்றுகள் 5 அடிக்கு மேல் வளர்ந்த பின்தான் வினியோகிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி நன்றாக வளர்ந்த பின் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.
பராமரிப்புக்கு முக்கியத்துவம்
ஊராட்சிகளில் நடப்படும் மரக்கன்றுகளின் பராமரிப்பு பெரும்பான்மையான கிராமங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது.
வேலை உறுதி திட்டப்பணியாளர்களுக்கு, இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை இப்பணிகளும் முதன்மையாக வழங்கப்பட்டது.
தற்போது, விவசாயப்பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், மரக்கன்றுகள் பராமரிப்பு மிக சில கிராமங்களில் மட்டுமே முழுவீச்சில் நடக்கிறது. ஊராட்சி பொது இடங்களில் நடப்படும் மரக்கன்றுகளுக்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. நடப்படுவதில், ஐம்பது சதவீதம் காய்ந்து வீணாகிறது.
கோடை காலம் துவங்குகிறது. கிராமங்களில் நீர்நிலைகளுக்கு அருகிலும், பொது இடங்களிலும், ரோட்டோரங்களிலும் நடப்படும் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்த, ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், அந்தந்த ஊராட்சிகளில் உள்ள வேலை உறுதி திட்டத்தினருக்கு, மரக்கன்றுகள் பராமரிக்கும் பணிகளையும் வழங்க ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.