/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
46 வேட்புமனு தாக்கல்! நிறைவு நாளில் திணறடித்த சுயேச்சைகள்
/
46 வேட்புமனு தாக்கல்! நிறைவு நாளில் திணறடித்த சுயேச்சைகள்
46 வேட்புமனு தாக்கல்! நிறைவு நாளில் திணறடித்த சுயேச்சைகள்
46 வேட்புமனு தாக்கல்! நிறைவு நாளில் திணறடித்த சுயேச்சைகள்
ADDED : மார் 28, 2024 05:10 AM
திருப்பூர், : திருப்பூர் லோக்சபா தொகுதியில், 38 வேட்பாளர்கள், மொத்தம் 46 வேட்புமனுக்களை செய்துள்ளனர். நிறைவுநாளான நேற்று ஒரேநாளில், 23 பேர் மனுதாக்கல் செய்து, தேர்தல் பிரிவு அலுவலர்களை திணறடித்து விட்டனர்.
திருப்பூர் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனுக்கள், கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 20 ல் துவங்கி நேற்று வரை பெறப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர் கிறிஸ்துராஜ், வேட்புமனுக்களை பெற்றார். இ.கம்யூ., சார்பில் சுப்பராயன், அ.தி.மு.க., - அருணாசலம், பா.ஜ., - முருகானந்தம், நாம் தமிழர் கட்சி - சீதாலட்சுமி, பகுஜன் சமாஜ் - பழனி மற்றும் மாற்று வேட்பாளர், சுயேச்சைகள் உள்பட நேற்று முன்தினம் வரை, 15 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர்.
நிறைவுநாளான நேற்று, காலை, 10:00 மணி முதலே, மனுதாக்கல் செய்ய, சுயேச்சை வேட்பாளர் ஏராளமானோர், கலெக்டர் அலுவலகத்துக்கு வரத்துவங்கினர். 11:00 மணி முதல், ஒருவேட்பாளருடன் நான்கு பேர் என்கிற அடிப்படையில், ஒருவர்பின் ஒருவராக மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
பா.ஜ., மாற்று வேட்பாளராக செந்தில்வேல் மற்றும் சுரேஷ், சுப்பிரமணி, சதீஸ்குமார், முத்துசாமி, மெய்யப்பன், யுவராஜ், செந்தில்குமார் உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் அடுத்தடுத்து மனுதாக்கல் செய்தனர். நேற்று ஒரே நாளில், 22 சுயேச்சை வேட்பாளர் உள்பட 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததால், தேர்தல் பணியாளர்கள் திணறிவிட்டனர்.
மதியம், 3:00 மணிக்குள் வந்த, 11 வேட்பாளர்களுக்கு, டோக்கன் வழங்கி, அறையில் அமரவைக்கப்பட்டனர். டோக்கன் அடிப்படையில், ஒவ்வொருவராக சென்று, வேட்புமனு தாக்கல் செய்தனர். ஈரோடு மாவட்டம் நம்பியூரை சேர்ந்த யுவராஜ், 44. இவர், வேட்டி, பனியன் மற்றும் கழுத்தில் பச்சை துண்டு அணிந்தபடி, தாம்பூல தட்டில் நெல் கொண்டுவந்து, சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். திருப்பூர் லோக்சபா தொகுதியில், மொத்தம் 38 வேட்பாளர்கள், 46 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
பெயர் பொருத்தம்
இ.கம்யூ., சார்பில் சிட்டிங் எம்.பி., சுப்பராயன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதேபெயரில், அந்தியூரை சேர்ந்த, 86 வயதான கே.சுப்பராயன் என்பவர் சுயேச்சையாக மனுதாக்கல் செய்துள்ளார். அ.தி.மு.க., சார்பில், அருணாச்சலம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபெயரில், பெருந்துறையைச்சேர்ந்த 65 வயதான அருணாச்சலம், சுயேச்சையாக போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளார்.
நான்கு பெண்கள்
திருப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, மூன்று பெண் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க., வேட்பாளர் அருணாசலத்துக்கு மாற்றாக அவரது மனைவி தீபா, நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் மாற்று வேட்பாளராக அபிநயாவும் மனுதாக்கல் செய்துள்ளனர். ராஷ்ட்ரிய சமாஜ் பக் ஷா சார்பில் மலர்விழி உள்பட பெண்கள் நான்கு பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.