ADDED : ஏப் 27, 2024 11:56 PM
திருப்பூர்:தமிழகத்தில் சமீப காலமாக தாரளமாக கிடைக்கும் போதை மாத்திரை, போதை ஊசி மற்றும் பல்வேறு போதை வஸ்துகளை பயன்படுத்திய சிறுவர்களும் இளம் தலைமுறையினரும் ரோடுகளில் உருளும் காட்சிகள் சகஜமாகி வருகின்றன.
ஆளும்கட்சி பின்னணியில் இருப்பவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை விற்பனையில் ஈடுபடுவதாக எதிர்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. இச்சூழலில், மாநிலம் முழுவதும் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, பதுக்கல் உள்ளிட்டவை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாநகரம், மாவட்ட போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையை கண்காணித்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், ஸ்டேஷனுக்கு, இரு போலீசார் விதம் என, 16 போலீசார், அவர்களுடன் இரு எஸ்.ஐ., என, 18 போலீசார் பணியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள், இரு குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு ஸ்டேஷன் பகுதியில் கஞ்சா பதுக்கல், விற்பனை, பழைய குற்றவாளிகள் நடவடிக்கை போன்ற அனைத்தையும் கடந்த சில நாட்களாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நேற்று, எஸ்.ஐ., ரஜினிகாந்த் தலைமையிலான போலீசார் சில இடங்களில் ரோந்து மேற்கொண்டு கஞ்சா கும்பலை பிடித்தனர்.
ஐந்து பேரை கைது செய்து, ஐந்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இவ்விஷயத்தில் அலட்சியமாக இல்லாமல், கூடுதல் கவனத்துடன் பணியை மேற்கொள்ள வேண்டும் என, கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்.

