/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நாகர்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம்
/
நாகர்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம்
நாகர்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம்
நாகர்கோவிலில் 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் கர்மயோகினி சங்கமம்
ADDED : பிப் 22, 2025 08:29 AM

திருப்பூர்; சேவாபாரதி சார்பில், 50 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் 'கர்மயோகினி சங்கமம்' நிகழ்ச்சி, வரும் மார்ச் 2ம் தேதி, நாகர்கோவிலில் நடைபெற உள்ளது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள பெண்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சி தொடர்பான விளக்க கூட்டம், திருப்பூரில் நேற்று நடந்தது. சேவாபாரதி மாநில துணைத்தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வாசுகி, அவிநாசிலிங்கம் பல்கலை பேராசிரியர் குருஞானாம்பிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவாபாரதி கோட்ட தலைவர் விஜயகுமார், மாவட்ட தலைவர் பிரேம் பிரகாஷ் சிக்கா வரவேற்றனர்.
மேகாலயா, மணிப்பூர் முன்னாள் கவர்னர் சண்முகநாதன் பேசியதாவது:
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பள்ளி, கல்லுாரி பணியிடத்துக்கு பெண்கள் பாதுகாப்பாக சென்றுவர முடிவதில்லை. அண்ணா பல்கலையில் மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர் மனதில் இது நெருப்பை அள்ளி வீசியுள்ளது. 'அந்த வேதனையோடும், இறைவா இனி இதுபோன்ற கொடுமைகள் நடக்கக்கூடாது' என்ற வேண்டுதலோடும் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார்.
பெண்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொண்டு, சக பெண்கள், குழந்தைகளையும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும். சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பு, முன்னேற்றம், எழுச்சியை கருத்தில் கொண்டு, சேவாபாரதி சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அமிர்தா பல்கலை வளாகத்தில், வரும் மார்ச் 2ம் தேதி 'கர்மயோகினி சங்கமம்' நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
கர்மயோகினி சங்கமம் நிகழ்ச்சியில், பல சமூக சீர்திருத்தங்கள் செய்த சாத்வி ராணி அஷல்யாபாய் ஹோல்கரின் 300வது பிறந்தநாள்; சேவாபாரதியின் 'வைபவஸ்ரீ' மகளிர் சுய உதவிக்குழுவின் 25ம் ஆண்டு விழா; சமுதாய மேம்பாட்டுக்கான திட்டங்களை துவக்கிவைத்தல்; ஆர்.எஸ்.எஸ்.,ன் 100 வது ஆண்டு விழா ஆகிய நான்கு முக்கிய விழாக்கள் இடம்பெறுகின்றன.
மாதா அமிர்தானந்தமயிதேவி, ஆர்.எஸ்.எஸ்., அகிலபாரத பொதுச்செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே, எம்.ஜி.ஆர்., பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுதாசேஷய்யன், ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பெண்கள் கூடும் இந்த நிகழ்ச்சியில், திருப்பூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான பெண்கள் பங்கேற்கவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.

