/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காண்டூர் கால்வாய் சுரங்க நீர் வழித்தடம் கடந்து செல்ல 5.5 கி.மீ., கான்கிரீட் ரோடு
/
காண்டூர் கால்வாய் சுரங்க நீர் வழித்தடம் கடந்து செல்ல 5.5 கி.மீ., கான்கிரீட் ரோடு
காண்டூர் கால்வாய் சுரங்க நீர் வழித்தடம் கடந்து செல்ல 5.5 கி.மீ., கான்கிரீட் ரோடு
காண்டூர் கால்வாய் சுரங்க நீர் வழித்தடம் கடந்து செல்ல 5.5 கி.மீ., கான்கிரீட் ரோடு
ADDED : ஆக 25, 2024 01:20 AM

உடுமலை;பி.ஏ.பி., காண்டூர் கால்வாயில், மலையடிவார பகுதியில், ரூ.4.65 கோடி மதிப்பில், 5.5 கி.மீ., துாரத்திற்கு கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டதத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
திட்ட தொகுப்பு அணைகளில் நீர் சேகரிக்கப்பட்டு, மேற்கு தொடர்ச்சி மலையில், அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள காண்டூர் கால்வாய் வழியாக, திருமூர்த்தி அணைக்கு நீர் கொண்டு வரப்பட்டு, பாசனத்துக்கு வினியோகிக்கப்படுகிறது. திட்டத்தின் ஆதாரமாக உள்ள காண்டூர் கால்வாய் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கால்வாய் பராமரிப்பு மற்றும் அதிகாரிகள் ஆய்வுக்கு செல்ல, கரையில் வழித்தடம் அமைந்துள்ளது. இதில், மலையை குடைந்து சுரங்கங்கள் அமைந்துள்ள பகுதியில், மலையடிவாரத்திற்கு வந்து, மீண்டும் கால்வாய் கரைக்கு செல்லும் வகையில், ரோடு வசதி உற்றது. இதில், நல்லாறு ஷட்டர் பகுதியில், 39.5வது கி.மீ.,ல், சிறிய சுரங்க நீர் வழிப்பாதை அமைந்துள்ளது.
இதனை கடக்க, நல்லாறு முதல், கட்டையன் ெஷட் மற்றும் வல்லக்குண்டாபுரம் என இரு இடங்களில், 5.5 கி.மீ.,துாரம் ரோடு அமைந்திருந்தது. இந்த ரோடும் குண்டும், குழியுமாகி அதிகாரிகளும், இந்த வழித்தடத்திலுள்ள விவசாயிகளும் பயன்படுத்த முடியாத சூழல் இருந்தது.
இதனையடுத்து, காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் திட்ட நிதியில், 4.65 கோடி ரூபாய் மதிப்பில், அங்கு கான்கிரீட் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால், வனத்துறை அனுமதி தராததால், பணிகள் இழுபறியானது. தற்போது அனுமதி பெறப்பட்டு, கான்கிரீட் ரோடு அமைக்கும் பணி துவங்கியுள்ளது.
அதிகாரிகள் கூறுகையில், 'நல்லாறு அருகேயுள்ள சுரங்க வழிப்பாதையை கடக்க, வல்லக்குண்டாபுரம் வழியாக காண்டூர் கால்வாய் கட்டையன் ெஷட் அருகே இணையும் வகையில், இரு பிரிவுகளாக, 5.5 கி.மீ.,துாரம், கான்கிரீட் ரோடு அமைக்கப்படுகிறது. இதனால், அவசர கால பயன்பாட்டிற்கும், ஆய்வு மற்றும் வழியோரத்திலுள்ள விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்,' என்றனர்.

