/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
630 மனுக்கள் குவிந்தன; தீருமா மக்கள் குறைகள்?
/
630 மனுக்கள் குவிந்தன; தீருமா மக்கள் குறைகள்?
ADDED : பிப் 25, 2025 06:54 AM

திருப்பூர்; மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் ஆகியோர் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். மொத்தம் 630 மனுக்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் சேர்க்கப்பட்டது.
ஆய்வு நடைபெறுமா?
கருப்பராயன் நகர் பகுதி மக்கள்: கணபதிபாளையம், பாபா அவென்யு மற்றும் வேலா அவென்யுவில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அருகிலுள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்திலிருந்து, வெண்மை மற்றும் கருமை நிற புகை வெளியேறுகிறது. மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வுமன் இண்டியா மூவ்மென்ட்: மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும், கடந்த நான்கு மாதங்களாக மேலாண்மை குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படவில்லை. பாலியல் புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மேலாண்மை குழு கூட்டங்களை முறையாக நடத்தி மாணவ, மாணவியரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.
மாநகராட்சி 52வது வார்டு முத்தையன் நகர் மேற்கு பகுதி மக்கள்: இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
நச்சு வாயு வெளியேற்றம்
நடுப்பாளையம் பகுதி மக்கள்: வெள்ளகோவில், மேட்டுப்பாளையம் கிராமம், நடுப்பாளையம், பாலத்தோட்டத்தில், பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலை கடந்த பத்து ஆண்டுகளாக செயல்படுகிறது. நச்சு வாயுக்களை பாதுகாப்பற்ற முறையில் வெளியேற்றி வருகிறது. பிளாஸ்டிக் கழிவுகளை இரவு நேரங்களில் கால்வாய் நீரில் கொட்டி, தண்ணீரையும் மாசுபடுத்துகின்றனர்.ஆலையை மூடவேண்டும்.
திருப்பூர் மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர்: இயக்க கூட்டத்துக்காக அச்சிடப்பட்ட சுவர் ஒட்டிகளை போலீசார் கிழித்தனர்.
வழித்தடம் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் பகுதி மக்கள்: அவிநாசி, கருவலுார், ராமநாதபுரம் ஆதிதிராவிடர் காலனியில் 30 குடும்பங்கள் வசிக்கிறோம். எங்கள் பயன்பாட்டிலுள்ள சுடுகாட்டுக்கு செல்லும் வழியை, தனியார் ஆக்கிர மித்துள்ளார்; வழித்தடத்தை மீட்டுக் கொடுக்கவேண்டும்.
ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முன்னாள் 5வது வார்டு உறுப்பினர் சரவணன்: கருக்கன்காட்டுப்புதுார் ஏ.டி., காலனியில், 600 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள ஏழு வீதிகளும், பழுதடைந்துள்ளன. சிமென்ட் ரோடு போட வேண்டும்.
பஸ் இயக்கப்படுமா?
தாராபுரம் ஒன்றியம், நந்தவனம் பாளையம் ஊராட்சி பகுதி மக்கள்: நந்தவனம் பாளையத்தில் 150 குடும்பங்கள் வசிக்கிறோம். எங்கள் பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லை. 3 கி.மீ., நடந்து சென்று, பஸ் பிடிக்கவேண்டியுள்ளது. பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நந்தவனம்பாளையம் ஊராட்சியில் உள்ள தெருக்களின் இருபுறமும் முட்புதர்கள் வளர்ந்துள்ளன. முட்புதர்களை அகற்றி, புதிய தார் ரோடு அமைத்துத்தரவேண்டும்.
வழித்தடத்தில் வராத பஸ்
அவிநாசி, ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார்: ராக்கியா பாளையம் பகுதியில் காமாட்சி நகர், ராசாக்கோவில், பாலாஜி நகர், உமையஞ்செட்டிபாளையம், தேவராயன்பாளையம், பைபாஸ் ரோடு, காசி கவுண்டம்பாளையம் பகுதிகள் உள்ளன.
இப்பகுதிகள் வழியாக இரு தனியார் பஸ்கள் இயங்கி வந்தன. இரு பஸ்களும் முற்றிலும் இந்த வழித்தடத்தை புறக்கணித்து விட்டன. பஸ்கள் முறையாக இவ்வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர், கணபதிபாளையம் கருப்பராயன் நகரில் ஆடை உற்பத்தி நிறுவனத்திலிருந்து வெளியேறும் புகையால் அப்பகுதி மாசு ஏற்படுவதாக கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்திருந்தனர்
சொட்டியது ரத்தம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைகேட்பு கூட்டம் நடைபெற்றபோது, பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். போர்டிகோ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டரிலிருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. போலீசார், உரியவரை அழைத்துவந்து, ஸ்கூட்டரின் பின்புறத்தை திறந்துபார்த்தனர். பாலிதின் கவரில் வைக்கப்பட்டிருந்த மீன் துண்டுகளிலிருந்து ரத்தம் சொட்டியது தெரியவந்தது.போலீசார், மீனை அவரிடமே திருப்பிக்கொடுத்தனர்.
தற்கொலை முயற்சி
திருப்பூர் பிச்சம்பாளையத்தை சேர்ந்த ஆரோக்கியமணி, தனது மனைவி உஷாராணியுடன் குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிக்கவந்தார். இவர், பாட்டிலில் கொண்டுவந்த மண்ணெண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார். போலீசார் தடுத்து நிறுத்தி, மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்தனர். அருகாமை வீட்டில் வசிப்பவர்கள் தன்னையும், தனது மனைவியையும் வீடுபுகுந்து தாக்கியதாகவும்; போலீசார் வழக்குப்பதிய மறுப்பதாகவும் ஆரோக்கியமணி கூறினார்.

