/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறந்த கல்விதான் சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்! சிக்கண்ணா கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் கருத்து
/
சிறந்த கல்விதான் சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்! சிக்கண்ணா கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் கருத்து
சிறந்த கல்விதான் சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்! சிக்கண்ணா கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் கருத்து
சிறந்த கல்விதான் சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்! சிக்கண்ணா கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் கருத்து
ADDED : மார் 06, 2025 06:24 AM

திருப்பூர்; ''சிறந்த கல்வி தான், சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்கும்'' என, சிக்கண்ணா கல்லுாரி பட்டமேற்பு விழாவில், முன்னாள் துணை வேந்தர் குழந்தைவேல் அறிவுரை வழங்கினார்.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 52வது பட்டமேற்பு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, முன் னாள் துணை வேந்தர் குழந்தைவேல் பேசியதாவது:
கல்வி என்பது அழகிய செயல்பாடு; கற்றல் என்பது தெளிதல், அறிதல், புரிதல், பண்படுதல், வினைதல், திறனடைதல், புதியன படைத்தல் என பல்வேறு நிலைகளில் வெளிப்படுகிறது. இந்த கல்வி பல நுாறு ஆண்டுகளாக வெவ்வேறு முறையில் மனிதர்களுக்கு கிடைத்துள்ளது.
கடந்த, 50 ஆண்டுகளில், தொழில்நுட்பம், கணினியியல், தொலைதொடர்பு உள்ளிட்ட துறைகளில் கற்பனை செய்ய முடியாத அளவில் வளர்ச்சி பெற்று, உலக நாடுகள், நம் உள்ளங்கையில் சுருங்கிவிட்டது. கல்வியில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது.
பல தரவுகளை திரட்டி மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். ஆசிரியர்களை தான் மாணவர்களை 'ரோல் மாடலாக' நினைக்கின்றனர்.
மாணவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப, ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்களை பொருத்தவரை, வேலைவாய்ப்புக்காக மட்டும் தான் கல்வி கற்கிறோம் என்ற மனநிலை கூடாது; தங்களை சீர்படுத்திக் கொள்ளவும், கல்வியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க, கல்விமுறை சிறந்ததாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கடந்த, 2022 - 2023ல், பட்டப்படிப்பு முடித்த, இளங்கலையில், 606 பேர்; முதுகலையில், 285 பேர் என, மொத்தம், 891 சான்றிதழ் பெற்றனர். விழாவில், கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
தங்கள் குழந்தைகள் பட்டப்படிப்பு முடித்து சான்றிதழ் பெறுவதென்பது தான், பெற்றோரின் மகிழ்ச்சிக்கான எல்லை. அதுவும், அரசு கல்லுாரிகளில் சாதாரண, சாமானிய, நடுத்தர வர்க்கத்து குடும்ப குழந்தைகள், அதிகம் படிக்கும் நிலையில், தங்கள் குழந்தைகள் பட்டம் பெறுவதை பார்த்து, பூரிப்படையும் நோக்கில், பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சில பெற்றோர், நேற்று கல்லுாரிக்கு வந்தனர். ஆனால், அவர்கள் நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை; இதனால், ஏமாற்றமடைந்தனர்.
கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'சிறிய அரங்கில் பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டதால், பெற்றோரையும் அழைத்தால், இட நெருக்கடி ஏற்படும்; அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படும்; இதனால், அவர்கள் மனம் சங்கடப்படும் என்ற நோக்கில் தான், அனுமதிக்கவில்லை. பெற்றோரை அழைத்து வர வேண்டாம், என, மாணவர்களிடம் முன்கூட்டியே கூறியிருந்தோம்,' என்றனர்.