/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரசாரத்தில் இடைவேளை: அரசியல் கட்சியினர் முடிவு
/
பிரசாரத்தில் இடைவேளை: அரசியல் கட்சியினர் முடிவு
ADDED : மார் 28, 2024 11:18 PM
உடுமலை:கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால், வேட்பாளர்களின் பிரசார பயண திட்டம், மதிய இடைவேளையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
கோடை காலம் துவங்கிய முதல் மாதத்திலேயே, வெயில் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, பகலில் உச்சிநேரத்தில் வெளியே நடமாட முடியாத அளவுக்கு அனல்காற்று வீசுகிறது. வெப்ப சலனத்தால் மழை வராதா என, ஒவ்வொருவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
குறிப்பாக, தள்ளுவண்டி வியாபாரம், ரோட்டோர வியாபாரம் செய்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக, பகல், 12:00 துவங்கி, 4:00 மணி வரை வெயில் குறைந்த பாடில்லை.
ஏற்கனவே, சூடுபறக்கும் தேர்தல் களத்துக்கு, கோடை வெயில் மென்மேலும் அனலாக மாற்றிக்கொண்டிருக்கிறது.
கடுமையான வெயில் காரணமாக, பிரசார திட்டத்தையே இடைவேளையுடன் தயாரிக்க, வேட்பாளர்கள் தயாராகிவிட்டனர்.
அதிகாலை துவங்கி, மதியம் 12:00 மணி வரை மட்டும் பிரசாரம் செய்வது என்றும், பிறகு, மாலை, 4:00 மணிக்கு மேல் பிரசாரத்தை தொடங்கி, இரவு, 10:00 மணிவரை தொடர்வது என்று முடிவு செய்துள்ளனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தலைவர்கள் பிரசார பயண திட்டத்தை வலுவாக்க, அதிக அளவு கூட்டம் சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.
இருப்பினும், பொதுக்கூட்டங்களை, காலை அல்லது மாலை நேரத்தில் நடத்தலாம் என்றும், முன்புபோல், உச்சிநேரத்தில் வேண்டாமென்றும் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று மனுக்கள் பரிசீலனை நடந்தது. நாளை (30ம் தேதி) வாபஸ் பெற அவகாசம் உள்ளது. அன்று மாலை, போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அதற்குபிறகே, பிரசாரக்களம் அனல்பறக்கப்போகிறது.
அ.தி.மு.க.,- இ.கம்யூ., - பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரசார பயணத்துக்காக, தேர்தல் நடத்தும் அலுவலர் அனுமதியுடன், பிரசார வேன்களும் தயார்படுத்தப்பட்டுள்ளன.
சில வேட்பாளர்கள், வேட்புமனு பரிசீலனை முடிந்ததும், வெள்ளிக்கிழமை முதல் பிரசாரத்தை துவக்க திட்டமிட்டுள்ளனர்.

