/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்களை அச்சுறுத்தும் ராட்சத தேன்கூடு
/
மக்களை அச்சுறுத்தும் ராட்சத தேன்கூடு
ADDED : ஏப் 27, 2024 01:47 AM

திருப்பூர்;கடந்த 2018 சம்பவத்தை நினைவில்கொண்டு, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள ராட்சத தேன்கூட்டை உடனடியாக அகற்றுவது அவசியமாகிறது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம், ஏழு தளங்களில், 30க்கும் மேற்பட்ட அரசு துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர்.
கலெக்டர் அலுவலக கட்டடத்தில், ஆங்காங்கே தேனீக்கள் கூடு கட்டிவிடுகின்றன. தற்போது, ஏழாவது தளத்தில், ஜன்னல் தாழ்வாரத்துக்கு கீழ் (சன் ஷேடு) மெகா தேன்கூடு ஒன்று உள்ளது; ராட்சத தேனீக்கள் கூட்டம் முகாமிட்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும், தேன் கூடு கலைந்து, தேனீக்கள் தங்களை பதம்பார்க்கும் அபாயம் உள்ளதால், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களும் பயத்துடனேயே கடந்துசெல்கின்றனர்.
தேனீக்கள் உள்ளே புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில், ஐந்து, ஆறாவது தளங்களில் உள்ள அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஜன்னலை திறப்பதே இல்லை.
கடந்த 2018, மே மாதம், கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தேன்கூடு கலைந்து, தேனீக்கள், பொதுமக்கள், போலீசார் உள்பட அனைவரையும் ஆக்ரோஷமாக விரட்டி விரட்டி கொட்டிய சம்பவம் நடைபெற்றது.
22 பேர் தேனீக்களால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்; கலெக்டர் அலுவலக வளாகமே கலவர பூமி போல் காட்சி யளித்தது.
தேன்கூடுதானே என அலட்சியப்படுத்தக்கூடாது. 2018ல் நடந்ததுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுவிடக்கூடாது.பொதுமக்கள், அரசு அலுவலர்களின் பாதுகாப்பு கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த தேன்கூட்டை தீயணைப்புத்துறையினர் மூலம் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.

