/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாதியில் நிற்கும் குழாய் பதிப்பு பணி
/
பாதியில் நிற்கும் குழாய் பதிப்பு பணி
ADDED : ஆக 20, 2024 10:38 PM
திருப்பூர்;திருப்பூர் பி.என்., ரோட்டில் குழாய் பதிப்பு பணிக்கு தோண்டிய குழி மண் கொட்டி மூடப்பட்டுள்ளது. அவ்வகையில், ஏற்பட்ட குழியில் மழை நீர் தேங்கியது. அவ்வழியாக வந்த அரசு பஸ்சின் இடதுபுற சக்கரங்கள் இந்த குழியில் இறங்கி பஸ் ஒருபுறமாக சாய்ந்தது. பஸ்சிலிருந்த பயணிகள் மாற்று ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். நீண்ட நேர முயற்சிக்குப் பின் பஸ் குழியிலிருந்து வெளியேற்றப்பட்டது.
நல்லாற்றுப் பாலம் முதல் சாந்தி தியேட்டர் வரையிலான பகுதியில் 4வது குடிநீர்திட்டத்தில் பிரதான குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக குழி தோண்டி புது பஸ் ஸ்டாண்ட் வரை குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அதன் பின் தொழிலாளர்கள் வராமல் குழாய் பதிப்பு பணி கடந்த ஒரு மாதமாக கிடப்பில் போட்டுக் கிடக்கிறது.
முழுமையாக குழாய் பதிப்பு பணி முடிந்த பின்பே நெடுஞ்சாலைத் துறையினர் ரோட்டை சீரமைப்பு செய்வர். தற்போது இப்பணி பாதியில் நிற்பதால், ரோடு பெருமளவு சேதமாகியும், குண்டும் குழியுமாகவும், குழாய் பதித்த இடம் பள்ளமாக மாறி பெரும் சிரமமும், போக்குவரத்துக்கு கடும் அவதியும் நிலவுகிறது.
இந்நிலையில், 16வது வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி தனது சொந்த முயற்சியால் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் மழை நீர் தேங்கிய குழிகளை மண் கொட்டி மூடியும், இடையூறான இடங்களில் பேரி கார்டு அமைத்தும் தற்காலிக தீர்வு ஏற்படுத்தினார்.
குழாய் பதிப்பு பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனம் இது குறித்து கண்டு கொள்ளாமல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.