/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மலையடிவாரத்தில் மறையும் வரலாற்று சின்னம்; பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை
/
மலையடிவாரத்தில் மறையும் வரலாற்று சின்னம்; பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை
மலையடிவாரத்தில் மறையும் வரலாற்று சின்னம்; பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை
மலையடிவாரத்தில் மறையும் வரலாற்று சின்னம்; பாதுகாக்க அரசுக்கு கோரிக்கை
ADDED : ஆக 29, 2024 09:57 PM
உடுமலை : உடுமலை அருகே, மலையடிவாரத்தில், போதிய விழிப்புணர்வு இல்லாமல் மறையும் வரலாற்று சின்னங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரலாற்று ஆய்வு நடுவத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர், கொழுமம் சுற்றுப்பகுதிகளில், குமண மன்னன் குறித்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவ்வகையில், கொழுமம் வனச்சரகத்தையொட்டி, மலையடிவார பகுதிகளில், மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், மக்களின் வாழ்வியல் தொடர்பான கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதில், ரெட்டையம்பாடி அருகே, பெரிய பாறைகள் அடுக்கப்பட்ட வித்தியாசமான கட்டமைப்பை கண்டறிந்தனர்.
இது குறித்து, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கூறியதாவது: கொழுமம் சுற்றுப்பகுதியை ஆட்சி செய்த குமண மன்னன் குறித்த தொடர் ஆய்வு செய்து வருகிறோம். சமீபத்தில், ரெட்டையம்பாடி அருகே, 15 அடி உயரத்துக்கும், 25 அடி அகலமும் உடைய கட்டமைப்பை பெரிய பாறைகளை கொண்டு அமைத்துள்ளனர்.
பாறையின் அடுக்குகள் பல்வேறு படிம நிலைகளை விளக்குகிறது; இந்த பாறைகள் 2 ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டைவையாக இருக்கலாம். இந்த பாறை அமைப்பும், அருகிலுள்ள விளைநிலங்களும், முற்காலத்து மக்களின் வாழ்வியல் சான்றாக விளங்குகிறது.
குமண மன்னன் குறித்த சங்க இலக்கிய பாடல்களில், முதிரை மலை தலைவன், முதிரவேள் குமணா என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் வகையில், 'முதிரம்' எனப்படும் கொள்ளு செடிகள் அங்கு தற்போது வரை செழித்து வளர்கிறது.
அப்பகுதியை சுற்றுப்பகுதி மக்கள் பாண்டிய ராஜா மடம் என அழைக்கின்றனர். சங்க இலக்கிய பாடல்களின் அடிப்படையில், தேடுதலை துவக்கி, 3 ஆண்டுகளுக்கு பிறகு, இவ்விடத்தை கண்டறிந்துள்ளோம்.
வனப்பகுதியிலும், மலையடிவாரத்திலும், போதிய விழிப்புணர்வு இல்லாமல், மறைந்து வரும் பெருங்கற்காலம் உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை பாதுகாக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
இந்த ஆய்வின் போது, தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி, வரலாற்று துறை பேராசிரியர் மதியழகன், தமிழாசிரியர் சிற்பிகணேசன், பாரதியார் நுாற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் விஜயலட்சுமி, ஜி.வி.ஜி., கல்லுாரி வரலாற்றுத்துறை மாணவி அறிவரசி மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் உடனிருந்தனர்.