/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு கிலோ தக்காளி ரூ.7 விலை சரிவால் வேதனை
/
ஒரு கிலோ தக்காளி ரூ.7 விலை சரிவால் வேதனை
ADDED : செப் 01, 2024 02:00 AM

உடுமலை: திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதிகளில், 30,000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதத்திற்கு முன், 14 கிலோ தக்காளி பெட்டி, 1,000 ரூபாய் வரை ஏலம் போனதால், விவசாயிகள் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்தனர்.
கடந்த மாதம் வரை, ஒரு பெட்டி, 600 -- 700 ரூபாய் வரை விற்றது. தற்போது, தக்காளி வரத்து அதிகரித்து, தினமும், ஒரு லட்சம் பெட்டிகள் வரை சந்தைகளுக்கு வரத்து காணப்படுகிறது.
நேற்று, 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி, 60 -- 100 ரூபாய் வரை மட்டுமே விற்றது. ஒரு கிலோ, 4 - 7 ரூபாய் வரை மட்டுமே விற்பதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
விவசாயிகள் கூறியதாவது:
தக்காளி சாகுபடிக்கு ஏக்கருக்கு, 40,000 ரூபாய் வரை செலவாகிறது. 1,000 முதல், 1,200 பெட்டிகள் மகசூல் கிடைக்கிறது.
பறிக்க கூலி, போக்குவரத்து கட்டணம், சுங்க கட்டணம், கமிஷன் செலவை விட, குறைந்த விலைக்கு விற்பதால் நஷ்டம் ஏற்படுகிறது.
பலர் காய்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளதோடு, செடிகளை அழிக்கவும் துவங்கியுள்ளனர். நடப்பு சீசனில் தக்காளி சாகுபடி பெரும் நஷ்டத்தை அளித்துள்ளது.
தக்காளி சாஸ் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்படும் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் இருப்பு வைத்து விற்பனை செய்யும் குளிர்பதன கிடங்கு வசதிகளை உடுமலை பகுதிகளில் அரசு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.