/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நிரம்பிய சோலையாறு; காத்திருக்கும் திருமூர்த்தி! கால்வாய் பராமரிப்பால் சிக்கல்
/
நிரம்பிய சோலையாறு; காத்திருக்கும் திருமூர்த்தி! கால்வாய் பராமரிப்பால் சிக்கல்
நிரம்பிய சோலையாறு; காத்திருக்கும் திருமூர்த்தி! கால்வாய் பராமரிப்பால் சிக்கல்
நிரம்பிய சோலையாறு; காத்திருக்கும் திருமூர்த்தி! கால்வாய் பராமரிப்பால் சிக்கல்
ADDED : ஜூலை 22, 2024 03:07 AM

உடுமலை;தொகுப்பு அணைகள் நிரம்பி வரும் நிலையில், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறப்படும் காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் நிறைவு பெறவில்லை; இதனால், பருவமழை காலத்தில், தண்ணீர் வீணடிக்கப்பட்டு, பாசனத்தில் சிக்கல் ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடுமலை அருகே திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., நான்கு மண்டல பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
மண்டல பாசன காலம் துவங்கும் முன், தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் வாயிலாக தண்ணீர் பெறப்பட்டு, திருமூர்த்தி அணையில் இருப்பு செய்யப்படும்.
பின்னர், மண்டல பாசன சுற்றுகள் மற்றும் நீர் அளவு நிர்ணயிக்கப்பட்டு, பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
பராமரிப்பு பணி
அடர்ந்த வனப்பகுதியில், மலைத்தொடரில், 49 கி.மீ., தொலைவுக்கு காண்டூர் கால்வாய் அமைந்துள்ளது. பல்வேறு காரணங்களால், இக்கால்வாய் சிதிலமடைந்து, நீரிழப்பு அதிகரித்து, திருமூர்த்தி அணைக்கு போதிய தண்ணீர் வந்து சேரவில்லை.
எனவே, காண்டூர் கால்வாய் பராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகள், கடந்த 2014ல் துவங்கி, குறிப்பிட்ட இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நடப்பாண்டு, மூன்று இடங்களில், 700 மீட்டர் நீளத்துக்கு, கால்வாய் புதுப்பிப்பு பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கியது. பழைய கட்டுமானங்களை அகற்றி, கான்கிரீட் கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பருவமழை துவக்கம்
காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேற்குத்தொடர்ச்சி மலையில், துவங்கி தீவிரமடைந்த பருவமழையால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகளான சோலையாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.
சோலையாறு அணை நிரம்பியுள்ளது; ஆனால், திருமூர்த்தி அணையில், 60 அடிக்கு, 28.23 அடி நீர்மட்டம் மட்டுமே உள்ளது.
தொகுப்பு அணைகள் நிரம்பியுள்ள நிலையில், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் எடுக்க முடியாதது விவசாயிகளிடயே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், மழை நீடித்தால், விரைவில், பரம்பிக்குளம் அணையும் நிரம்பும் வாய்ப்புள்ளது.
தற்போது, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் எடுத்திருந்தால், வரும் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும்.
ஆனால், காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகள் எப்போது நிறைவு பெறும் என பொதுப்பணித்துறையினர் தெளிவாக தெரிவிக்கவில்லை.
வழக்கமாக ஆக., மாதத்தில், இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் பெறுவது காலதாமதமானால், மண்டல பாசனத்தை குறித்த நேரத்தில் துவக்க முடியாது; சுற்றுகளும் குறைக்கப்பட்டு, ஆயக்கட்டு பகுதியில், பாதிப்பு ஏற்படும்; தொகுப்பு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வீணாகும்.
எனவே, காண்டூர் கால்வாய் பராமரிப்பு பணிகளை துரிதப்படுத்தி உடனடியாக முடிக்க வேண்டும். இரண்டாம் மண்டல பாசனத்துக்கு பாசன சுற்றுகள் குறைக்கப்பட்டால் ஏற்படும் பாதிப்புக்கு, பொதுப்பணித்துறையினர் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.

