/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு குட்டை 'குவாரி' ஆனது! பல்லடத்தில் இப்படியும் நடந்த அவலம்
/
ஒரு குட்டை 'குவாரி' ஆனது! பல்லடத்தில் இப்படியும் நடந்த அவலம்
ஒரு குட்டை 'குவாரி' ஆனது! பல்லடத்தில் இப்படியும் நடந்த அவலம்
ஒரு குட்டை 'குவாரி' ஆனது! பல்லடத்தில் இப்படியும் நடந்த அவலம்
ADDED : செப் 04, 2024 02:19 AM

பல்லடம்;கிராவல் மண் கடத்தலால், பல்லடம் அருகே, நீர் ஆதார குட்டை ஒன்று கல்குவாரி போல் மாறியுள்ளது.
தமிழக அரசின் வண்டல் மண், களி மண் அள்ளும் திட்டத்தின் கீழ், பல்லடம் வட்டாரத்தில், 30க்கும் மேற்பட்ட குளம் குட்டைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை பயன்படுத்தி, வண்டல் மண்ணே இல்லாத குளம் குட்டைகளிலும், கிராவல் மண் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
சட்ட விரோதமாக, கிராவல் மண் அள்ளிய வாகனங்களை விவசாயிகள் சிறைபிடித்த சம்பவங்களும் பல இடங்களில் நடந்தன. அவ்வகையில், பல்லடம் அருகே உள்ள நீர் ஆதாரக் குட்டை ஒன்று கல்குவாரி போல் மாறி உள்ளது.
பல்லடம் ஒன்றியம், மாதப்பூர் ஊராட்சி, தொட்டிபாளையம் கிராமத்தில் உள்ள சத்திர குட்டை ஏறத்தாழ ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்குட்டையிலும் வண்டல் மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மண் அள்ளப்பட்டு வந்த நிலையில், சாதாரணமாக இருந்த இக்குட்டை, தற்போது கல்குவாரி அளவுக்கு மிக ஆழமாக மாறியுள்ளது.
குட்டையில் நீர் தேங்கும் கொள்ளளவுக்கு ஏற்ப, ஷட்டர்கள், கரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குட்டையை ஆழப்படுத்துவதால், மழைக்காலங்களில் கூடுதல் தண்ணீர் தேங்கி குட்டையின் கரைகள் உடையும் அபாயம் உள்ளது. இதன் காரணமாகவே, கடந்த காலங்களில் மண் அள்ள முயன்றபோது இப்பகுதி மக்கள் பலமுறை தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தற்போது எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல், மண் அள்ளப்பட்டதுடன், குட்டையை ஆழப்படுத்தியது, எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என, இப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.