/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பார்த்தீனியம் களையால் தொடர் பாதிப்பு கிராமங்களில் தேவை சிறப்பு திட்டம்
/
பார்த்தீனியம் களையால் தொடர் பாதிப்பு கிராமங்களில் தேவை சிறப்பு திட்டம்
பார்த்தீனியம் களையால் தொடர் பாதிப்பு கிராமங்களில் தேவை சிறப்பு திட்டம்
பார்த்தீனியம் களையால் தொடர் பாதிப்பு கிராமங்களில் தேவை சிறப்பு திட்டம்
ADDED : ஆக 13, 2024 01:35 AM
உடுமலை;பருவமழைக்கு பிறகு, கிராமங்களில், அனைத்து இடங்களையும் ஆக்கிரமித்து வளரும், பார்த்தீனியம் களையை கட்டுப்படுத்த, ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக சிறப்புத்திட்டத்தை செயல்படுத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களிலுள்ள, கிராமங்களில், தென்மேற்கு பருவமழைக்கு பிறகு, விளைநிலங்கள், தரிசு நிலங்கள், ரோட்டோரங்கள், குடியிருப்பு வீதிகளில் முக்கிய பிரச்னையாக, பார்த்தீனியம் களை அதிகளவு பரவியுள்ளது. மழை நீர் ஓடைகள் தெரியாத அளவுக்கு இச்செடிகள் ஆக்கிரமித்துள்ளது.
பார்த்தீனிய செடியில், ஒவ்வொரு பூங்கொத்திலும் நான்கு விதைகள் காணப்படும்; இவ்விதைகள், நான்கே வாரத்திற்குள், நிலத்தில் விழுந்து முளைத்து, மீண்டும் பூத்து விதைகளை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும்.
மழை, வறட்சி என அனைத்து சீதோஷ்ண நிலைகளையும், இக்களைச்செடி தாங்கி வளரும் தன்மையுடையதாகும்.
இச்செடிகளால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. விளைநிலங்களில், பார்த்தீனிய களைச்செடியை கட்டுப்படுத்த விவசாயிகள், குறிப்பிட்ட இடைவெளியில், களைக்கொல்லி தெளிக்கின்றனர்.
ஆனால், குடியிருப்புகள் மற்றும் பொது இடங்கள், மழை நீர் ஓடைகளில், ஆக்கிரமித்துள்ள இக்களைச்செடிகளை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதனால், அவற்றின் பரவல், ஒவ்வொரு மழை சீசனிலும் அதிகரித்து வருகிறது.
தற்போதும், இக்களைச்செடிகளின் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த பார்த்தீனிய களை மேலாண்மைதான் இக்களையை கட்டுப்படுத்த சிறந்த முறை என, வேளாண்துறை ஆராய்ச்சிகள் வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கிராமங்களில், பொது இடங்கள் மற்றும் மழை நீர் ஓடைகளில், பார்த்தீனிய செடிகளை அகற்றி, இயற்கை சூழலை பாதுகாக்க வேண்டும்.
இதற்காக, சில ஆண்டுகளுக்கு முன், பார்த்தீனிய களை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், கிராமம் வாரியாக நடத்தப்பட்டது. அத்தகைய முகாம்களை, வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கும் முன் நடத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.