/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.40 லட்சம் வீணடிப்பு; அதிகாரிகள் அலட்சியம்: பூளவாடி மக்கள் வேதனை
/
ரூ.40 லட்சம் வீணடிப்பு; அதிகாரிகள் அலட்சியம்: பூளவாடி மக்கள் வேதனை
ரூ.40 லட்சம் வீணடிப்பு; அதிகாரிகள் அலட்சியம்: பூளவாடி மக்கள் வேதனை
ரூ.40 லட்சம் வீணடிப்பு; அதிகாரிகள் அலட்சியம்: பூளவாடி மக்கள் வேதனை
ADDED : ஏப் 08, 2024 02:02 AM

உடுமலை;உடுமலை அருகே, ரூ.40 லட்சம் செலவில் கட்டப்பட்ட சந்தை வளாகம் திறக்கப்படாமல், திறந்தவெளியில், கடைகள் செயல்படுவது குறித்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், ஒன்றிய அதிகாரிகள் அலட்சியத்துடன் உள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், பூளவாடியில் பழமையான வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. சுற்றுப்பகுதியிலுள்ள, 20க்கும் அதிகமான கிராம மக்கள், விவசாயிகள் இந்த சந்தையை பயன்படுத்தி வருகின்றனர். முன்பு பிரசித்தி பெற்றதாகவும், அதிகளவு வர்த்தகம் நடக்கும் சந்தையாகவும் பூளவாடி இருந்தது.
இருப்பினும் போதிய மேம்பாட்டு பணிகள் சந்தையில் மேற்கொள்ளப்படவில்லை. திறந்தவெளியில், சிறிய மேடை கட்டப்பட்டு, கடைகள் செயல்பட்டு வந்தன.
போதிய வசதிகள் இல்லாததால், காய்கறி விற்பனை செய்பவர்களும், வாங்கும் மக்களும், பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வந்தனர்.
கழிவுகளை திறந்தவெளியில் வீசுவதால், சுகாதாரமான முறையில், காய்கறி விற்பனை, வாங்குவதில் சிரமம் இருந்தது.
எனவே, பூளவாடி வாரச்சந்தையை மேம்படுத்த வேண்டும் என, நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து கடந்த, 2020ல், தமிழக அரசு, 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
தொடர்ந்து, பழைய சந்தை வளாகத்திலேயே இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் துவங்கின. புதிய சந்தை கட்டட வளாகத்தில், 51 மேற்கூரையுடன் கூடிய கடைகள், வாகன நிறுத்தம், காய்கறிகளை இருப்பு வைக்க இரண்டு அறைகள், கழிப்பிடம் ஆகியவை கட்டப்பட்டன.
கட்டுமான பணிகள் நிறைவு பெற்று, 2021, பிப்., மாதத்தில், புதிய சந்தை கட்டடம், பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது.
திறப்பு விழா முடிந்து, 3 ஆண்டுகளாகியும் புதிய சந்தை வளாகம் முழுமையாக பயன்படுத்தப்படாமல், காட்சிப்பொருளாக காணப்படுகிறது.
ஆனால், சந்தை வழக்கம் போல், பழைய இடத்திலேயே திறந்தவெளியில் நடத்தப்பட்டு வருகிறது. சுகாதார சீர்கேடும் நிரந்தரமாக உள்ளது. புழுதி பறக்கும் இடத்தில் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். அந்த இடம் சுகாதாரமில்லாமல் உள்ளதால், பலரும் காய்கறிகளை வாங்க, தயக்கம் காட்டும் நிலை உள்ளது. இறைச்சிக்கழிவுகளும் திறந்தவெளியில் வீசப்படுகிறது.
இத்தகைய அவல நிலை நிலவுவது குறித்து குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகள் யாரும் இதுவரை அப்பகுதியில் எட்டிப்பார்க்கவில்லை; மண்டல அலுவலர்கள், பி.டி.ஓ.,க்கள், திட்ட இயக்குனர் ஆகியோருக்கு பல முறை மனு அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
அரசுப்பணம் 40 லட்ச ரூபாய் வீணடிக்கப்பட்டு, மக்களும் அவல நிலையில், காய்கறி வாங்கி வருவது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாதது மக்களை வேதனைக்குள்ளாகியுள்ளது.

