அனுப்பர்பாளையம் : திருப்பூர் அடுத்த வாவி பாளையம் திருமுருகன் நகரை சேர்ந்தவர் செல்வம்; பனியன் நிறுவன மேலாளர். இவரது மனைவி சிவகாமி, 40, இவர்களது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
சிவகாமி, நேற்று முன்தினம் மாலை பள்ளியில் இருந்து மகளை அழைத்து வர மொபட்டில் சென்றார்.
அம்மன் நகர் அருகே சென்றபோது, அங்கு கடையின் முன்பு பைக்கில் நின்று கொண்டிருந்த நபர் திடீரென பைக்கை இயக்கினார். இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சிவகாமி, அவ்வழியாக வந்த லாரியின் பின் சக்கரத்தில் சிக்கினார். படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் இறந்தார்.
தொழிலாளி பலி
பொங்கலுார் குமாரபாளையத்தில் வசித்தவர் வீரசேகர், 27; கூலித் தொழிலாளி. இவரது சொந்த ஊர் அரியலுார் மாவட்டம் ஆண்டிமடம். மனைவி சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். வீரசேகர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். வீட்டின் கதவு திறக்காமல் இருந்ததால் அவரது நண்பர்கள் சந்தேகம் அடைந்து கதவைத் தட்டிப் பார்த்தனர்.
உள்ளிருந்து துர்நாற்றம் வீசியது. அவர்கள் அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்த பொழுது வீரசேகர் இறந்து அழுகிய நிலையில் கிடந்தார்.

