/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பச்சை மிளகாயை மதிப்பு கூட்டினால் 'ஜோர்'
/
பச்சை மிளகாயை மதிப்பு கூட்டினால் 'ஜோர்'
ADDED : மே 03, 2024 11:55 PM

உடுமலை:வற்றல் மிளகாய்க்கு விற்பனை வாய்ப்புகள் அதிகமிருப்பதால், உடுமலை பகுதி விவசாயிகள், மிளகாயை மதிப்பு கூட்டும் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில், சொட்டு நீர் மற்றும் நுண்ணீர் பாசனம் உட்பட தொழில்நுட்பங்களை பின்பற்றி, காய்கறி சாகுபடியில், விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
இதில், பச்சை மிளகாய், பாப்பனுாத்து, குட்டியகவுண்டனுார், ஆண்டியகவுண்டனுார் உள்ளிட்ட பகுதிகளில், ஆண்டு முழுவதும் சாகுபடியாகிறது. கடந்தாண்டு, வடகிழக்கு பருவமழை போதியளவு பெய்யவில்லை.
இதனால், சாகுபடி பரப்பு குறைந்தது. இருப்பினும், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, அறுவடை பணிகளை திட்டமிட்டு, மதிப்பு கூட்டுவதிலும், விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
மிளகாய் சாகுபடியில், ெஹக்டேருக்கு, 13 மெட்ரிக்., டன், வரை விளைச்சல் கிடைப்பதாக தெரிவிக்கின்றனர். விலை வீழ்ச்சியின் போது, பச்சை மிளகாயை செடியிலேயே பழுக்க விட்டு, பின்னர் அறுவடை செய்கின்றனர்.
இதில், விதைத்தேவைக்கு குறிப்பிட்ட சதவீதத்தை பயன்படுத்திக்கொள்கின்றனர். மேலும், உலர்களங்களில் காய வைத்து வற்றல் மிளகாயாகவும் விற்பனை செய்கிறார்கள். செடியிலேயே மிளகாயை காய விடுவதால், அவற்றின் எடை வெகுவாக குறைந்து, ெஹக்டேருக்கு, 3 மெட்ரிக்., டன் வற்றல் மிளகாய் கிடைக்கிறது.
பச்சை மிளகாயை விட, வற்றலுக்கு அதிக விலை கிடைப்பதால், உடுமலைப்பகுதி விவசாயிகள் கிராம உலர்களங்களில், வற்றலை காய வைத்து தரம் பிரிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.
உலகளவில், மிளகாய் வற்றல் உற்பத்தி, நுகர்வோர் மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முன்னணியில் உள்ளது. மொத்த மிளகாய் உற்பத்தியில், 80 சதவீதம் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகிறது.
எனவே, வற்றல் மிளகாய்க்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், அதற்கான உற்பத்தியில், உடுமலை பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.