/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெரிசலை தவிர்க்க கூடுதல் மேம்பாலம்; ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு
/
நெரிசலை தவிர்க்க கூடுதல் மேம்பாலம்; ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு
நெரிசலை தவிர்க்க கூடுதல் மேம்பாலம்; ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு
நெரிசலை தவிர்க்க கூடுதல் மேம்பாலம்; ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 25, 2024 10:35 PM
உடுமலை : ராமசாமி நகர் ரயில்வே கேட் மற்றும் குமரலிங்கம் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேம்பாலம் அமைப்பதற்கு, ஆய்வு செய்து ரயில்வே நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உடுமலை காந்திநகர் அருகே தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து குமரலிங்கம் செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தொலைவுடையது. உடுமலையிலிருந்து பழநிக்கு மாற்றுப்பாதையாக இந்த ரோடு உள்ளது.
சுற்றுலா வாகனங்கள் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளிலிருந்து பழநிக்கு இயக்கப்படும் தனியார் பஸ்களும் இந்த ரோட்டில் சென்று வருகின்றன.
பள்ளிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகள் இந்த வழித்தடத்தில் அமைந்துள்ளதால், இந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகளவு இருக்கும். இந்நிலையில், குமரலிங்கம் ரோட்டில், உடுமலை அருகே அகலரயில்பாதை செல்கிறது.
அகல ரயில்பாதையில், படிப்படியாக ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு வருகிறது.இந்த ரயில் வழித்தடத்தில் தினமும் நான்கு ரயில்கள் செல்கின்றன.
போக்குவரத்து அதிகமுள்ள ரோட்டில், ரயில்வே கேட் அடிக்கடி மூடப்படும் போது, வாகனங்கள், தேசிய நெடுஞ்சாலை வரை அணிவகுத்து நிற்பதால், நகரப்பகுதியில் நெரிசல் அதிகரிக்கிறது.
எனவே குமரலிங்கம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும். இதே போல், ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை வழியாக ராமசாமி நகர், அரசு கலைக்கல்லுாரி, கோட்டாட்சியர் அலுவலகம், ஐ.டி.ஐ., உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது.
இந்த ரோட்டில், உழவர் சந்தை அருகே, ரயில்பாதை குறுக்கிடுகிறது. இவ்விடத்திலும், ரயில்கள் கடக்கும் போது அதிக நெரிசல் ஏற்படுகிறது; ரோடும் படுமோசமாக மாறியுள்ளது.
குறிப்பாக, காலை, மாலை நேரங்களில், ராமசாமி நகர் ரயில்வே கேட் பகுதியில், போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அங்கு நெரிசல் தீருவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. அந்த நேரங்களில் வாகனங்கள் வேகமாக செல்லும் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்களும், வாகன ஓட்டுநர்களும் பல முறை அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் தீர்வு இன்னும் ஏற்படவில்லை.
எனவே, இரு ரயில்வே கேட் பகுதியிலும், ஆய்வு செய்து விரைவில் மேம்பாலம் கட்ட ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

