/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அசைக்க முடியாத கோட்டையில் ஆட்டம் கண்ட அ.தி.மு.க.,
/
அசைக்க முடியாத கோட்டையில் ஆட்டம் கண்ட அ.தி.மு.க.,
ADDED : ஜூன் 05, 2024 10:34 PM

அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையான அவிநாசி சட்டசபை தொகுதியில், இம்முறை அ.தி.மு.க.,வுக்கு சரிவு ஏற்பட்டிருக்கிறது; தி.மு.க., வுக்கான ஓட்டும் குறைந்திருக்கிறது; அதே நேரம், பா.ஜ.,வுக்கான ஓட்டு அதிகரித்திருக்கிறது.
கொங்கு மண்டலத்தில், அ.தி.மு.க.,வின் அசைக்க முடியாத கோட்டையாக கருதப்படும் தொகுதிகளில் அவிநாசி (தனி) தொகுதியும் ஒன்று. இம்முறை லோக்சபா தேர்தலில், அவிநாசி தொகுதியில், அ.தி.மு.க.,வுக்கு கிடைத்த ஓட்டுகளின் எண்ணிக்கை சரிந்திருக்கிறது. மொத்தம், 13 லட்சம் ஓட்டுகளை உள்ளடக்கிய நீலகிரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட அவிநாசி சட்டசபை தொகுதியில், 2.08 லட்சம் ஓட்டுகள் பதிவாகின.
இதில், வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் ராஜாவுக்கு, 85,129 ஓட்டு கிடைத்திருக்கிறது; கடந்த, 2019 தேர்தலில், 94,594 ஓட்டுகள் கிடைத்தது. கடந்த தேர்தலை விட, 9,365 ஓட்டுகள் குறைவாக கிடைத்திருக்கிறது. அ.தி.மு.க.,வுக்கு, 54,543 ஓட்டுகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஆனால், கடந்த, 2019 தேர்தலில், 76,824 ஓட்டுகள் அக்கட்சிக்கு கிடைத்தது; கடந்த தேர்தலை விட இம்முறை, 22 ஆயிரத்து 281 ஓட்டுகள் குறைந்திருக்கிறது. அதே நேரம், பா.ஜ., 48,206 ஓட்டுகள் பெற்றிருக்கிறது. இந்த கணக்குப்படி, அ.தி.மு.க., கோட்டையில் அக்கட்சி சரிவை சந்தித்து இருப்பது தெளிவாகி உள்ளது.