/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீண்டும் லாரி தண்ணீரை எதிர்பார்க்கும் நிலை!
/
மீண்டும் லாரி தண்ணீரை எதிர்பார்க்கும் நிலை!
ADDED : மே 04, 2024 12:15 AM

பல்லடம்;கோடை வெயில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உக்கிர தாண்டவம் ஆடி வருகிறது.
'மழை நீர்... உயிர் நீர்' 'குடிநீரை வீணாக்காதீர்' என, எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், காது கொடுத்தும் கேட்பாரில்லை. இதன் விளைவு, இன்று, வறட்சி தாண்டவமாடி தண்ணீர் தட்டுப்பாடு பரவலாக ஏற்பட்டு வருகிறது. கோடை மழை பெய்யாவிட்டால், எதிர் வரும் நாட்களை சமாளிப்பது மிகவும் சிரமம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தேவையான காலகட்டங்களில் மழை நீரை சேமிக்காமலும், கிடைத்த நீரை அலட்சியத்துடன் வீணாக்கியதாலும் ஏற்பட்டதன் விளைவு, இன்று, லாரி தண்ணீருக்காக குடத்துடன் ரோட்டுக்கு வர வேண்டிய அவலம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளில், அத்திக்கடவு, பில்லுார் கூட்டு குடிநீர் திட்டங் களின் கீழ், தினசரி, 40 லட்சம் லிட்., குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பில்லுார் அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால், தற்போது, கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், நகராட்சிக்கு வரவேண்டிய குடிநீர் பாதியாக குறைந்துள்ளது. பற்றாக்குறையை போக்க, எல் அண்ட் டி தண்ணீரை நகராட்சி வினியோகித்து வருகிறது. குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க, நகராட்சிக்கு உட்பட்ட, 18 வார்டுகளிலும் நான்கு லாரிகள் மூலம், தினசரி, 24 ஆயிரம் லிட்., வினியோகிக்கப்பட்டு வருகிறது.
வீடு தோறும், வீதிகள் தோறும் குழாய்கள் பதிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வரும் நிலையில், சிலர், அலட்சியத்துடன் குடிநீரை வீணடிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர். விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விழிக்காததால் இன்று இந்த அவல நிலை ஏற் பட்டுள்ளது.
நீரை சேமிப்பது மற்றும் வீணாக்குவதை தவிர்ப்பது என்பதை இனியும் பின் பற்றாவிட்டால், இயற்கை அளிக்கும் தண்டனையை அனைவரும் அனுபவித்து தான் ஆக வேண்டும் என்பதில் மாற்றவில்லை.
வறட்சி தாண்டவமாடி தண்ணீர் தட்டுப்பாடு பரவலாக ஏற்பட்டு வருகிறது. கோடை மழை பெய்யாவிட்டால், எதிர்வரும் நாட்களை சமாளிப்பது மிகவும் சிரமம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது