/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை நீர் சேகரிக்க மீள் நிரப்பு கட்டமைப்பு அனைத்து கிராமங்களுக்கும் தேவை
/
மழை நீர் சேகரிக்க மீள் நிரப்பு கட்டமைப்பு அனைத்து கிராமங்களுக்கும் தேவை
மழை நீர் சேகரிக்க மீள் நிரப்பு கட்டமைப்பு அனைத்து கிராமங்களுக்கும் தேவை
மழை நீர் சேகரிக்க மீள் நிரப்பு கட்டமைப்பு அனைத்து கிராமங்களுக்கும் தேவை
ADDED : ஏப் 10, 2024 12:36 AM

உடுமலை;மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த உதவும், மீள் நிரப்பு கட்டமைப்புகளை அனைத்து ஊராட்சிகளிலும், அமைக்க திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், குடிநீர் வினியோகத்துக்கு உள்ளூர் நீராதாரங்களான, போர்வெல் அதிகம் பயன்பட்டு வந்தது.
நிலத்தடி நீர்மட்டம் குறைவு உட்பட காரணங்களால், மூன்று ஒன்றியங்களிலும், நுாற்றுக்கணக்கான போர்வெல்கள் பயன்பாடு இல்லாமல், கைவிடப்பட்டு, காட்சிப்பொருளாக உள்ளது.
இந்த போர்வெல்களில் மழை நீரை சேகரிக்கவும், மீள் நிரப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், மீள் நிரப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்த, தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கப்பட்டது.
நிதியில், 3 மீ., நீளம், அகலத்துடன், 2.5 ஆழத்தில், குழிகளை ஏற்படுத்தி, போர்வெல் குழாய்களில், நீர் கசிவு துளைகள் ஏற்படுத்தப்படும்.
மண் உள்ளே செல்லாமல் இருக்க, வலை சுற்றி, குழியில் ஜல்லிக்கற்கள் நிரப்புவதுடன், மேற்பரப்பில், அரை அடி உயரத்துக்கு, குழியை சுற்றி சிறிய சுவர் கட்டப்படும். மழை நீர் உள்ளே செல்ல நான்கு பக்கங்களிலும், குழாய்களும் பதிக்கப்படும்.
இத்திட்டத்தால், போர்வெல்களில் நீர்மட்டம் உயர்ந்து, மீண்டும் அவற்றை பயன்படுத்த முடியும். இதே போல், சிறிய மழை நீர் ஓடைகளிலும், மீள் நிரப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது.
ஆனால், இத்திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்தப்படவில்லை. ஒவ்வொரு ஒன்றியத்திலும் சில ஊராட்சிகளில் மட்டுமே திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்தது.
இந்தாண்டு போதிய மழை இல்லாமல், வறட்சி துவங்கியுள்ளது. கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழையை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் மழை நீரை சேகரிக்கும் வகையில், மீள் நிரப்பு கட்டமைப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை வாயிலாக நடவடிக்கை எடுப்பது அவசியமாகியுள்ளது.
மேலும், சில ஆண்டுகளுக்கு முன், ஏற்படுத்தப்பட்ட மீள் நிரப்பு கட்டமைப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், ஒன்றியம் வாரியாக ஆய்வு செய்து அவற்றை பராமரிக்கவும், கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

