/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அமராவதி ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்குங்க! கரும்பு பயிரிடுவோர் சங்கம் வலியுறுத்தல்
/
அமராவதி ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்குங்க! கரும்பு பயிரிடுவோர் சங்கம் வலியுறுத்தல்
அமராவதி ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்குங்க! கரும்பு பயிரிடுவோர் சங்கம் வலியுறுத்தல்
அமராவதி ஆலையை நவீனப்படுத்த நிதி ஒதுக்குங்க! கரும்பு பயிரிடுவோர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : செப் 09, 2024 02:03 AM
உடுமலை:அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த, உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும், என கரும்பு பயிரிடுவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில் தமிழக முதல்வர், வேளாண் துறை அமைச்சர், சர்க்கரை துறை ஆணையர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:
திருப்பூர் மாவட்டம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையின், துணை நிறுவனமான எரிசாராய ஆலை, கழிவுப்பாகு இல்லாமல், ஆலை நிறுத்தம் செய்ய வேண்டிய நிலை இருந்தது.
இந்நிலையில், எரிசாராய ஆலை இயக்க தேவையான கழிவுப்பாகு, மற்ற ஆலைகளிலிருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, எத்தனால் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்துள்ள நிலையில், எரிசாராய ஆலையில் எத்தனால் உற்பத்தி செய்யப்படுவதால், ஆலை நல்ல நிலையில் இயங்கும்.
ஆனால், தமிழத்தின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1961ல் துவக்கப்பட்டது. பழமையான ஆலை என்பதால், இயந்திரங்கள் தேய்மானமடைந்து, அரவைத்திறன் குறைந்தது.
முழு அளவில் கரும்பு அரவை செய்ய முடியாமல், குறைந்தளவு கரும்பு அரவை செய்து, சர்க்கரை கட்டுமானம் குறைந்து, ஆலை நஷ்டத்தை சந்தித்தது.
இந்த ஆலையை புனரமைக்க தேவையான நிதி ஒதுக்க கோரி, பல முறை கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. வேளாண் துறை அமைச்சரிடம் நேரில் மனு அளித்த நிலையில், சிறப்பு நிதி ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை அரசு நிதி கிடைக்காததால், ஆலையை நவீனப்படுத்தும் பணி இழுபறியாகி வருகிறது. நடப்பு ஆண்டு, ஆலை அரவை செய்ய முடியாமல், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதோடு, கரும்பு சாகுபடியும் பாதித்துள்ளது. எனவே, தமிழக அரசு அமராவதி சர்க்கரை ஆலையை நவீனப்படுத்த, உடனடியாக நிதி ஒதுக்கி, பணியை துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.