/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வரின் கவனத்துக்கு இன்னுமா செல்லவில்லை! அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகள் ஆவேசம்
/
முதல்வரின் கவனத்துக்கு இன்னுமா செல்லவில்லை! அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகள் ஆவேசம்
முதல்வரின் கவனத்துக்கு இன்னுமா செல்லவில்லை! அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகள் ஆவேசம்
முதல்வரின் கவனத்துக்கு இன்னுமா செல்லவில்லை! அமராவதி சர்க்கரை ஆலை விவசாயிகள் ஆவேசம்
ADDED : பிப் 25, 2025 10:39 PM

உடுமலை; அமைச்சர்கள் ஆய்வு செய்தும், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைக்க நிதி ஒதுக்கவில்லை, என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
உடுமலை அருகேயுள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, 21ஆயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர்.
60 ஆண்டுகள் பழமையான இந்த ஆலை இயந்திரங்களை புனரமைக்க, நிதி ஒதுக்க கோரி பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மூன்று ஆண்டுகளாக ஆலை இயக்க முடியாமல் மூடப்பட்டுள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.
இது குறித்து உடுமலையில் நடந்த, விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவர் வீரப்பன் பேசியதாவது: அமராவதி சர்க்கரை ஆலை, தென்னிந்தியாவில் அதிக பிழிதிறன், சர்க்கரை உற்பத்தி திறன் கொண்டதாகவும், முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையாகவும் உள்ளது.
அதே போல், தமிழகத்தில் எரிசாராய ஆலையுடன் கூடியதாகவும், 50 லட்சம் லிட்டர் கொள்ளளவு என மிகப்பெரிய எரிசாராய ஆலையும், துணை ஆலையாக உள்ளது. இதனால், அரசுக்கு அதிக வருவாய் கிடைத்து வந்தது.
இந்த ஆலையின் இயந்திரங்கள் பழமையானதாக உள்ளதால், இதனை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும்; ஆறு மாதத்தில் அக்கடனை ஆலை செலுத்தி விடும் என, விரிவான திட்ட அறிக்கையும் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாவட்ட அமைச்சர் பல முறை ஆய்வு செய்தும், சர்க்கரைத்துறை அமைச்சருடன் வந்து ஆய்வு செய்தும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், பல மாதமாகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இன்னுமா, தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வில்லை.
ஆலை மூடப்பட்டுள்ளதால், கரும்பு விவசாயிகள், ஆலை தொழிலாளர்கள், நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெறும் பல லட்சம் தொழிலாளர்களும் பாதித்துள்ளனர்.
இதே நிலை நீடித்தால், வரும் காலத்தில், இப்பகுதியில் கரும்பு சாகுபடி முற்றிலும் அழிந்து விடும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதற்கு பதில் அளித்த கோட்டாட்சியர் குமார், ''மாவட்ட கண்காணிப்பு குழு அலுவலர் தலைமையில் நடந்த கூட்டத்திலும், இது குறித்து விவாதிக்கப்பட்டது. ஆலையை புனரமைக்க ரூ.176 கோடி தேவை என ஆலை நிர்வாகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது. தமிழக அரசு நடவடிக்கையில் உள்ளது,'' என்றார்.