ADDED : ஜூன் 01, 2024 12:06 AM
திருப்பூர்;வரத்து குறைவு, காற்றின் வேகத்துக்கு அதிகளவில் உதிர்ந்து விடுவதால், மல்லிகை பூ விலையை, செவ்வந்தி பூ விலை முந்தியுள்ளது.
வழக்கமான நாட்களில், மல்லிகை பூ, 250 கிராம், 60 முதல், 120 ரூபாய், கிலோ, 250 முதல், 400 ரூபாய்க்கு விற்கப்படும். சீசன், விசேஷ நாட்களில், 250 கிராம், 200 முதல், 300 ரூபாய், கிலோ, 800 முதல், 1200 ரூபாய் வரை விற்கப்படும்.
செவ்வந்தி பூ கிலோ, 200 முதல், 300 ரூபாய், ஆயுதபூஜை போன்ற காலங்களில் வாங்குவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், கிலோ, 600 ரூபாயாக உயரும். பத்து நாட்களுக்கு முன் பெய்த மழை சற்று ஓய்ந்து, வெயில் அதிகமாகியுள்ளது. இரவு மற்றும் மாலை நேர காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இதனால், பூ வரத்தில் இயல்பு இல்லாத நிலை நீடிக்கிறது. தற்போது, மல்லிகையை விட, செவ்வந்தி வரத்து குறைந்து வருகிறது. இதனால், செவ்வந்தி, 250 கிராம், 90 ரூபாய்க்கும், மல்லிகை, 250 கிராம், 70 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
வழக்கமாக செவ்வந்தியை விட மல்லிகை பூ விலை உயர்ந்திருக்கும் நிலையில், வரத்து குறைவு, காற்றின் வேகத்துக்கு தாக்கு பிடிக்காமல், அதிகளவில் உதிர்ந்து விடுவதால், செவ்வந்தி வரத்து குறைந்துள்ளது. இதனால், விலை உயர்ந்துள்ளது. செவ்வந்தி பூவை வாங்கி விற்பதில், வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.